உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாக்., அணு ஆயுத கட்டளை மையம் அழிப்பு: ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் சாதனை!

பாக்., அணு ஆயுத கட்டளை மையம் அழிப்பு: ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் சாதனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : ''ஆப்பரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் அணு ஆயுத கட்டளை மையத்தை தாக்கி அழித்தோம். இது மிகப்பெரிய சாதனை ,'' என ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் தியாகராஜன் தெரிவித்தார்.ஆப்பரேஷன் சிந்துாரின் பெருமையை, கோவை மக்களுக்கு பறைசாற்ற, 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'சாணக்யா' சார்பில், உரை வீச்சு எனும் நிகழ்ச்சியை நடத்துகின்றன. இன்று மாலை 6:00 மணிக்கு, கோவை ஆர்.எஸ்.புரம், கிக்கானி பள்ளி கலையரங்கில், நிகழ்ச்சி நடந்தது.சாணக்யாவின் முதன்மை செயல் அலுவலர் ஆர்.ரங்கராஜ் பாண்டே பேசியதாவது: ஆப்பரேஷன் சிந்தூர், இந்திய வரலாற்றில் மட்டும் அல்ல உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு விஷயம். உலக வரலாற்றில் இரண்டு அணுஆயுத நாடுகள் மோதிக் கொண்டது தற்போதுதான். பாகிஸ்தான் கள்ளத்தனமாக அணு ஆயுதம் தயாரித்துள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்த போதும், இந்தியா முதுகில் பாகிஸ்தான் குத்தியது. காஷ்மீர் சிறப்பு சட்டம் கடந்த கால வரலாறு ஆகியது. சாத்தியம் இல்லை என்று கருதப்பட்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. சாத்தியம் இல்லாததை சாத்தியப்படுத்தியவர் பிரதமர் மோடி. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக முடிந்த பிறகு ராணுவம் அறிவித்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தாண்டி பாகிஸ்தானிலும் தாக்குதல் நடத்தினாலும் பயங்கரவாத முகாம்கள் மீது தான் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆப்பரேஷன் சிந்தூரின் வெற்றியை நாட்டின் வெற்றியாக பிரதமர் பார்க்கிறார். வெற்றியை இந்தியாவின் வெற்றியாக கருதி, அனைத்து கட்சி எம்.பி.,க்களை பிரதமர் மோடி அனுப்பி வைத்தார்.இந்தியா தார்மீக பூமி என்பதற்கு ஆப்பரேஷன் சிந்தூர் ஒரு அடையாளம். சோதனை வந்தால், காஷ்மீர் முதல் குமரி வரை ஒன்றாக நிற்பார்கள் என்பதற்கு ஆப்பரேஷன் சிந்தூர் ஒரு அடையாளம்.யாருக்கு துவக்க தெரிகிறதோ அவர்களுக்கு முடிக்கவும் தெரியும். பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக் கொண்டது. அந்நாட்டு அமைச்சர்கள் ஒப்பு கொள்கின்றனர். நாங்கள் கேட்டதாலேயே இந்தியா போரை நிறுத்தியதாக தெரிவிக்கின்றனர். ட்ரோன் தொழில்நுட்பத்தில் உலகத்துக்கு போர் கற்றுக் கொடுத்தோம்.வெளிநாடுகளை நம்பியிருந்த நாம், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்ய துவங்கியது. இவ்வாறு அவர் கூறினார்.

ஒரே நாளில் தாக்குதல்

ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் தியாகராஜன் பேசியதாவது: இந்தியாவில் வரலாறு மறைக்கப்பட்டு இருக்கிறது. மறக்கப்பட்டு இருக்கிறது. கார்கில் போரின்போது, இந்திய ராணுவம் எல்லை தாண்டாமல், பாகிஸ்தானை விரட்டியது. மும்பையில் 5 முறை பயங்கரவாத தாக்குதல் நடந்த போதும் எந்த பதிலடியும் கொடுக்கப்படவில்லை. 2014 முதல் பிரதமர் மோடி இந்தியாவிற்கு புதிய வரலாற்றை படைக்கிறார். அவர் வரும் போது ராணுவம் மோசமான நிலையில் இருந்தது. ராணுவத்தை மேம்படுத்தி புதிய ஆயுதங்களை வழங்கினார். உரியில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தினோம். ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு இந்திய வீரர்கள் கூட கொல்லப்படவில்லை.புல்வாமாவில் தாக்குதல் நடந்ததும், பாலகோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்தினோம். இது குறித்து கட்சிகள் ஆதாரங்கள் கேட்டன. அவர்களுக்கு ராணுவம் மீது சந்தேகம் ஏற்பட்டது. பல கட்சிகள், தலைவர்கள், பாகிஸ்தான், சீனாவின் குரலாக தாக்குதல் குறித்து கேள்வி கேட்டனர். இது ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட சாபமாக பார்க்கிறேன். பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பிறகு, இரு மடங்கு பதிலடி இருக்கும் என பிரதமர் உறுதியளித்தார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு மறுநாளே ஏன் தாக்கவில்லை என கேட்டனர்.போரை துவக்குவதற்கு முன்னர், எல்லையில் ராணுவத்தை நிறுத்த வேண்டும். வான்வெளி பாதுகாப்பை சரி செய்ய வேண்டும்எந்த இடத்தை எதை வைத்து தாக்கவேண்டும் என முடிவு செய்ய வேண்டும். முப்படைகளை ஒற்றுமையுடன் செய்ய வேண்டும். இதை செய்ய அவகாசம் வேண்டும். ஆனால், உலக வரலாற்றில் 12 நாளில் இது அனைத்தையும் செய்து ஒரே நாளில் தாக்குதல் நடத்தினோம். ஆப்பரேஷன் சிந்தூர் முடிக்கவில்லை. தற்காலிகமாக தான் நிறுத்தி வைத்துள்ளோம்.நம்முடைய வான் பாதுகாப்பை போல் வேறு எங்கும் கிடையாது. உலகில் துல்லியமான பாதுகாப்பு கொண்டது இந்திய வான் பாதுகாப்பு தான். அணு ஆயுதம் வைத்துள்ளது என மிரட்டியது. ஆனால், அணு ஆயுதம் கட்டளை மையத்தை தாக்கி அழித்தோம்.உலகில் முதல் முறையாக அணுஆயுத கட்டளை மையத்தை அழித்தது இந்தியா தான். இது மிகப்பெரிய சாதனை.தலைவன் வலிமையானவனாகவும், எந்தஒரு கஷ்டமான நேரத்தில் சரியான முடிவு எடுக்கக்கூடியவராக வேண்டும் என கலாம் கூறினார். இன்று அந்த தலைவர் உள்ளார் கலாம் கனவை நனவாக்கும் பிரதமர் கூறினார். தற்போது வரை நடந்தது முன்னோட்டம் தான். இந்த மோதலில், 5 சதவீத ஆயுதப்படைகளை மட்டும் தான் பயன்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

டெர்ரர் பஸ்டர்

பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் பேசுகையில், ஆப்பரேஷன் சிந்தூரை தனிமைபடுத்தப்பட்ட நிகழ்வாக பார்க்க முடியாது. நாட்டின் வரலாற்றை புரிந்து கொண்டு பார்க்கும் போது தான் வெற்றியை புரிந்து கொள்ள முடியும். ஆப்பரேஷன் சிந்தூர் கொடுத்த முதல் வெற்றி, தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம் தான் என்பதை நிரூபித்துள்ளது. இந்தியாவை விமர்சிக்கிற அரசியல் சக்திகளை, ஆபரேஷன் சிந்தூர், இந்தியாவுக்கு ஆதரவாக, ராணுவத்துக்கு ஆதரவாக, மோடிக்கு ஆதரவாக பேச வைத்துள்ளது. இதில் ராகுல் மட்டுமே விதிவிலக்கு.இந்தியாவும், பிரதமர் மோடியும் டெர்ரர் பஸ்டர். இஸ்ரேல் மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது. அந்நாட்டை சுற்றி உள்ள நாடுகள் அனைத்தும் எதிரிகளாக உள்ளன. ஆனால், அந்நாட்டை எதுவும் செய்யவில்லை. ஆபரேஷன் சிந்தூரில் பெற்றி வெற்றிக்கு, இஸ்ரேல் அளித்த தளவாடங்களும் காரணமாக உள்ளன. ஆப்பரேஷன் சிந்தூருக்கு பிறகு, சீனாவுடன் ராணுவ ஒப்பந்தங்கள் போட்ட நாடுகள் அதனை மறுபரிசீலனை செய்து வருகின்றன. உலகில் பயங்கரவாதம் என்றால் என்ன அதன் வடிவமைப்பு என்ன அதனை எப்படி கையாள வேண்டும், அதனை எப்படி ஒழிக்கவேண்டும் என தெரிந்தவர் அஜித் தோவல் மட்டுமே. அப்படிப்பட்ட நிபுணத்துவம் பெற்றவர்களை கண்டுபிடித்து பதவியில் பிரதமர் மோடி அமர வைக்கிறார்.இவ்வாறு அவர் பேசினார்.இதன் பிறகு, கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூன் 29, 2025 22:18

மீண்டும் பாக்கிஸ்தான் வளர்ப்பு பயங்கரவாதிகள் காஷ்மீரில் எந்த தாக்குதலும் நடத்தாமல் கண்காணிக்கவேண்டும்.


Senthoora
ஜூன் 30, 2025 07:18

இந்த செய்தியை நம்புறீங்களா? அளிக்கக்கூடாது என்றுதானே அமெரிக்க தலையிட்டது. என்ன அது அமெரிக்காவுக்கு எழுதப்படாத சொந்தம்.


முக்கிய வீடியோ