கோப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும் தகவல் ஆணையம் கண்டிப்பு
சென்னை:'கோப்புகளை முறையாக பராமரிக்காமல், 'தேடிப்பார்த்தோம் கோப்புகள் கிடைக்கவில்லை' என்று, பொது தகவல் அலுவலர்கள் பதில் கூறுவது வருத்தம் அளிக்கிறது' என, மாநில தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. கோவை வடவள்ளி பகுதியில் உள்ள நிலத்தின் கூட்டு பட்டாவை, உதவி கலெக்டர் ரத்து செய்தது தொடர்பான கோப்புகளை பார்வையிட அனுமதி கோரி, அன்புவேள் என்பவர், கோவை தெற்கு பகுதி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு மனு அளித்தார். ஆனால், அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு, மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜரான பொதுத்தகவல் அலுவலர், 'மனுதாரர் கோரிய கோப்புகள் கிடைக்கவில்லை' என்றார். தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு: கோப்புகளை முறையாக பராமரிக்காமல், 'தேடிப்பார்த்தேன், கோப்புகள் கிடைக்கவில்லை' என, பொதுத்தகவல் அலுவலர்கள் பதில் கூறுவது வருத்தம் அளிக்கிறது. மனுதாரர் கோரும் கோப்பு கிடைக்காததற்கு, யார் பொறுப்பு என்பதை கண்டறிந்து, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் நிர்வாக ஆணையர், நில நிர்வாக ஆணையர், நில சீர்திருத்த துறை ஆணையர், நில அளவை ஆணையர் ஆகியோர் தனித்தனியாக, கோப்புளை முறையாக பராமரிப்பது தொடர்பாக, அந்தந்த மாவட்ட பொது அதிகார அமைப்பு களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.