உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழக்கு தாக்கல் செய்வதற்கு பதில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே? த.வெ.க.,வுக்கு ஐகோர்ட் குட்டு

வழக்கு தாக்கல் செய்வதற்கு பதில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே? த.வெ.க.,வுக்கு ஐகோர்ட் குட்டு

சென்னை:கோவில் காவலாளி கொலையை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி, காவல் துறைக்கு மீண்டும் மனு அளிக்கும்படி த.வெ.க.,வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சென்னை சிவானந்தா சாலையில், நாளை ஆர்ப்பாட்டம் நடத்த த.வெ.க., திட்டமிட்டுள்ளது. அதற்கு அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி, த.வெ.க., சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, நீதிபதி பி.வேல்முருகன் முன், முறையீடு செய்யப்பட்டது.அதற்கு, 'என்ன அவசரம் உள்ளது' என, நீதிபதி கேள்வி எழுப்பினார். 'இந்த ஆட்சியில் இதுவரை 23 விசாரணை மரணங்கள் நடந்துள்ளன. அதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது' என, த.வெ.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதி கூறியதாவது:நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு பதில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். அதாவது, குற்றம் செய்யாதீர்கள்; மனைவியை கொடுமைப்படுத்தாதீர்கள் என, விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.இந்த மனு பட்டியலிடப்பட்டால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.இவ்வாறு நீதிபதி கூறினார்.இதன்படி நேற்று மாலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. த.வெ.க., தரப்பில், 'ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி, ஜூலை 1ல் விண்ணப்பம் செய்யப்பட்டது. அதற்கு வேறு இடத்தை தேர்வு செய்யும்படி, காவல் துறை வாய்மொழியாக அறிவுறுத்தியது. வேறு இடத்தை தேர்வு செய்து விண்ணப்பித்தபோதும், அதை பரிசீலிக்கவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு:ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது மட்டும் காவல் துறையின் வேலையல்ல. காவல் துறையினருக்கு அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள். ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு, மீண்டும் காவல் துறையிடம் விண்ணப்பியுங்கள்.அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து, காவல் துறை தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை