உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.ஓ.டி., பணியை ஆன்லைனில் முடிக்க பதிவுத்துறையில் புதிய வசதி அறிமுகம்

எம்.ஓ.டி., பணியை ஆன்லைனில் முடிக்க பதிவுத்துறையில் புதிய வசதி அறிமுகம்

சென்னை:வங்கியில் கடன் வாங்குவோர், 'எம்.ஓ.டி.,' என்ற அசல் ஆவண ஒப்படைப்புக்கான பணியை, சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமல், ஆன்லைன் முறையிலேயே முடிக்கும் புதிய வசதியை, பதிவுத்துறை அறிமுகம் செய்து உள்ளது.தமிழகத்தில் வீடு வாங்குவோர், வங்கியில் கடன் பெறுவது வழக்கம். தொழில், வர்த்தக பணிகளுக்கும் மக்கள் கடன் பெறுகின்றனர். இவ்வாறு கடன் வாங்கும் போது, தங்களிடம் உள்ள சொத்தின் அசல் ஆவணங்களை வங்கியில் ஒப்படைப்பர்.

நேரில் வர வேண்டும்

கடன் முடியும் வரை, அசல் ஆவணங்கள் வங்கி கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் சொத்தானது உரிமையாளரின் பயன்பாட்டில் இருக்கும். கடன் தவணை முடிந்த நிலையில், வங்கியின் சார்பில் உரிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகம் சென்று, அசல் ஆவண ஒப்படைப்புக்கான எம்.ஓ.டி., பத்திரத்தை முடிக்க வேண்டும். இதற்கான நடைமுறையில், வங்கி அதிகாரிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் நேரில் வருவது கட்டாயமாக இருந்தது. சொத்து பரிமாற்றம் தொடர்பாக, எந்த சரி பார்ப்பும் தேவைப்படாது என்பதால், வங்கி அதிகாரிகள், தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே, ஆன்லைன் முறையில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற புதிய அறிவிப்பு, கடந்த ஆண்டு வெளியானது.

சாப்ட்வேரில் வசதி

இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டாலும், நடவடிக்கைகள் தாமதமாகின. தற்போது, ஆன்லைன் பத்திரப்பதிவுக்கான, 'ஸ்டார் - 2.0' சாப்ட்வேரில், இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வங்கி அதிகாரிகள் நேரில் வராமல், பதிவுத்துறை இணையதளத்தில், தங்கள் பெயரில் கணக்கு துவங்கி, அதில் உரிய விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். கட்டணத்தையும் ஆன்லைன் வழியே செலுத்தினால் போதும். இதன் அடிப்படையில், ரசீது ஆவண பதிவு முடிக்கப்பட்டு, அந்த விபரம் சம்பந்தப்பட்ட சொத்தின் வில்லங்க சான்றிதழில் பதிவேற்றப்படும். இதற்கான வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது; வங்கி அதிகாரிகள் இதை பயன்படுத்தலாம் என, சார் பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அலட்சியம் ஏன்?

கடன் தவணை முடிந்த நிலையில், எம்.ஓ.டி., என்ற அசல் ஆவண ஒப்படைப்பை, ஆன்லைன் வழியே முடிக்கும் வகையிலான, பதிவுத்துறையின் புதிய வசதி அனைவருக்கும் பயன் தரக்கூடியதாக உள்ளது. இந்த வசதியை, வங்கி அதிகாரிகள் பயன்படுத்த, சார் பதிவாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான சார் பதிவாளர்கள், இதுபோன்ற வசதி இருப்பதை தெரிவிக்காமல், வங்கி அதிகாரிகளை நேரில் அழைக்கின்றனர். புதிய வசதி குறித்து, பதிவுத்துறை இணைய தளத்திலும், சார் பதிவாளர் அலுவலகங்களிலும், பொதுமக்கள், வங்கி அதிகாரிகள் அறியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். குறிப்பாக சார் பதிவாளர்களின் ஒத்துழைப்பை, மேலதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். - பி.பாலமுருகன்சொத்து மதிப்பீட்டாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை