ஜாதி பெயர்களை நீக்கும் திட்டம் திரித்து தவறாக பிரசாரம் செய்வதா? அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்
விருதுநகர்:''சமூக நீதியின் பயணமாக பொது இடங்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்கும் திட்டத்தை பழனிசாமி திரித்து தவறாக பிரசாரம் செய்து வருவது கண்டிக்கத்தக்கது,'' என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். விருதுநகரில் அவர் அளித்த பேட்டி: அரசின் பெயர் மாற்றும் திட்டம் என்பது ஊர், தெரு, சாலைகள் என பொது இடங்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கி, மாற்று பெயர் இடுவது ஆகு ம். சமத்துவத்தை உருவாக்கி, ஜாதி பாகுபாடுகளை களைவதே நோக்கம். கிராம சபை கூட்டங்கள் மூலம் மக்களிடம் கருத்து கேட்ட பின்பே, பெயர் மாற்றங்கள் செயல்படுத்தப்படும். இதற்கு வேறு வண்ணம் பூசும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். இது கண்டிக்கத்தக்கது. மாலை நேர பிரசாரத்தில் ஏதாவது கருத்துகளை திரித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அரசியல் நோக்கத்திற்காக குறுக்குச்சால் ஓட்டுவதை, இனியாவது நிறுத்த வேண்டும். கோவையில் முதல்வர் திறந்த மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர் சூட்டப்பட்டதை தவறாக புரிந்து, அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என வேண்டுமென்றே பொய் பிரசாரம் செய்கின்றனர். நீதியின் பயணமாக இருக்கக்கூடிய இந்த திட்டத்தை, அரசியல் லாபமாக பார்க்க வேண்டாம். அரசு பட்டியலில் இருந்துதான் பெயர் சூட்ட வேண்டும் என கட்டாயம் இல்லை. அந்த பகுதி மக்களே பெயரை தேர்வு செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட சமுதாய மக்கள் இழி நிலை படுத்தப்படுவதை தவிர்க்க இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 21 நாட்களில் ஜாதிப் பெயர்கள் நீக்கப்படும். விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என பா.ஜ., மாநிலத் தலைவர் நாகேந்திரன் கூறியது, அம்மிக் குளவியை எடுத்து அடி வயிற்றில் அரைத்துத் கொள்வது போல் உள்ளது. இந்த விமர்சனங்களை எல்லாம் முறியடித்து, தகுதி வாய்ந்த அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.