உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாய்களை கருணை கொலை செய்ய அரசாணையா? அதிகாரிகள் விளக்கம்

நாய்களை கருணை கொலை செய்ய அரசாணையா? அதிகாரிகள் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நோய்வாய்பட்ட நாய்களை கருணை கொலை செய்வது தொடர்பாக, தமிழக கால்நடை துறை சார்பில், புதிதாக அரசாணை எதுவும் வெளியிடப்படவில்லை; ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான் அது' என, கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நோய்வாய்ப்பட்ட நாய்களை கருணை கொலை செய்ய, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால், அப்படி எந்த அரசாணையும் வெளியிடப்படவில்லை என கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: கடந்த 2023ல், ஏ.பி.சி., திட்டம் என்ற பெயரில் நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ், நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் விடப்படும். இதை, பிராணிகள் நல வாரியம் கண்காணிக்கிறது. அதேபோல, கேன்சர் போன்ற தீராத நோய்வாய்ப்பட்ட நாய்களை, கால்கள் உடைந்து வாழ சிரமப்படும் நிலையில் உள்ள நாய்களை கருணை கொலை செய்யலாம். அதற்கென ஒரு கமிட்டி உள்ளது. அவர்கள் அந்த நாயை நேரில் பார்த்து பரிசோதித்த பின், அவர்களின் அறிவுரையின் படி, தகுதியுள்ள கால்நடை மருத்துவர், அந்த நாயை கருணை கொலை செய்யலாம். இதுவும், 2023 முதல் நடைமுறையில் உள்ளது. ஆனால், துன்புறுத்தி கொல்லக்கூடாது. அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. 'அனஸ்தீசியா' எனப்படும் மயக்க மருந்தை அதிகமாக கொடுத்து, இதயத் துடிப்பை செயலிழக்கச் செய்வர். இது நடைமுறையில் உள்ளதே. தமிழகத்தை பொறுத்தவரை, இது குறித்து புதிதாக எந்த அரசாணையும் வெளியிடப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடைமுறை என்ன?

நோய்வாய்ப்பட்ட நாய் குறித்த விபரத்தை, முதலில் அப்பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். அவர் நாயை காப்பாற்ற முடியாத நிலை இருந்தால், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து, மாவட்ட கால்நடை துறை மண்டல இணை இயக்குநர், உதவி இயக்குநர், அப்பகுதியில் உள்ள பிராணிகள் நல வாரிய அலுவலர் ஆகியோர் அடங்கிய கமிட்டிக்கு தகவல் அளிப்பார். அவர்கள் நாயின் நிலை குறித்து ஆராய்ந்து, அனுமதி அளித்த பின், பதிவு பெற்ற கால்நடை மருத்துவர் மட்டுமே கருணை கொலை செய்ய முடியும். தனி மனிதர் யாரும் நாயை கொலை செய்ய அனுமதி இல்லை; அப்படி செய்வது சட்டப்படி குற்றம். புதிய கொள்கை தமிழகத்தில் சாலைகளில் விலங்குகள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசு புதிய கொள்கை ஒன்றை வெளியிட திட்டமிட்டது. தற்போது கொள்கை தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதை முதல்வர் வெளியிடுவார் என கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சண்முகம்
ஜூலை 28, 2025 08:30

வீடில்லா மனிதனை விட வீடில்லா நாயிடம் பரிவு காட்டும் மனிதநேயம்!


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 28, 2025 07:34

தெருநாய் மற்றும் ஆதரவாளர்களையும் இந்த அரசாணையில் சேர்க்க வேண்டுகிறோம்.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 28, 2025 07:33

அதிகாரிகள் எந்த விளக்கமும் தரத் தேவையில்லை. எவனாவது எதிர்த்தால் அவன் வீட்டுக்குள் நாலு நாய்களை விட்டு வெளிக்கதவை பூட்டிட வேண்டும்.


Ram
ஜூலை 28, 2025 06:44

அணைத்து தெருநாய்களையம் பிடித்து அடைக்கவேண்டும் . நாய் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அடக்கவேண்டும்


visu
ஜூலை 28, 2025 06:19

அமெரிக்கா போன்ற நாடுகளில் எல்லாவற்றிலும் உதாரணம் சொல்லுபவர்கள் இது போன்ற விஷயங்களில் சொல்லுவதில்லை நாய் இப்படி தெருவில் திரிய முடியாது வாய் கவசம் போட்டுத்தான் வெளியே அழைத்துவர வேண்டும் கக்கா போனால் உரிமையாளர் அள்ளவேண்டும் இந்தியாவில் சரியாக அடுத்தவன் வீடு வாசலில் கக்கா போகும் கேட்கமுடியாது அங்க சுட்டு தள்ளிடுவாங்க


சிட்டுக்குருவி
ஜூலை 28, 2025 01:43

கார்பொரேஷன் எல்லைகுள் நாய்கள் சாலையில் திரியாமல் இருக்க கால்நடை மருத்துவமனைகளில் நாய்கள் காப்பகம் உண்டடாக்கவேண்டும்.செல்லப்பிராணிகள் வளர்ப்போர் மருத்துவமனைகளில் இருந்து ஆரோக்கியமான நாய்களை விலைக்கு பெற்று கொள்ளல்லாம் .


புதிய வீடியோ