உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விண்ணில் வழிகாட்டி செயற்கைக்கோள் செஞ்சுரி அடித்து இஸ்ரோ சாதனை

விண்ணில் வழிகாட்டி செயற்கைக்கோள் செஞ்சுரி அடித்து இஸ்ரோ சாதனை

சென்னை: தரை வழி, கடல், வான்வெளி போக்குவரத்துக்கு வழிகாட்டும் 'என்.வி.எஸ்., - 02' செயற்கைக் கோளை இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி., - எப் 15 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது. இதையடுத்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 100வது ராக்கெட்டை இஸ்ரோ செலுத்தி 'செஞ்சுரி' சாதனை படைத்துள்ளது.நம் நாட்டின் தகவல் தொடர்பு, புவி கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு பயன்படும் செயற்கைக் கோளை வடிவமைத்து பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட் உதவியுடன் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் விண்ணில் நிறுத்தி வருகிறது.அதன்படி நாட்டின் தரை வழி, கடல் வழி, வான் வழி போக்குவரத்துக்கும், பாதுகாப்புக்கும் உதவ ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., எனப்படும் இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டது.இதன் வாயிலாக 2013 முதல் 2018 வரை எட்டு வழிகாட்டுதல் செயற்கைக் கோள்கள் வெற்றி கரமாக விண்ணில் நிறுத்தப்பட்டன. இதனால் நம் நாட்டிற்கு என்று தனி வழிகாட்டி 'நாவிக்' தொழில்நுட்பம் செயல்பாட்டில் உள்ளது. இது அமெரிக்காவின் ஜி.பி.எஸ்., தொழில்நுட்பம் போன்றது.'நாவிக்' தொழில்நுட்பத்தில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1ஜி செயற்கைக் கோளுக்கு மாற்றாக என்.வி.எஸ்., 01 செயற்கைக்கோள் 2023 மே மாதம் விண்ணில் நிறுத்தப்பட்டது. தற்போது அதிநவீன தொழில்நுட்பத்தில் என்.வி.எஸ்., 02 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 2250 கிலோ எடை உடைய இந்த செயற்கைக்கோளை சுமந்தபடி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 6:23 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி., - எப் 15 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.பூமியில் இருந்து புறப்பட்ட 19 நிமிடங்கள், 17வது விநாடியில் 322.93 கி.மீ., துாரம் உள்ள புவி வட்ட பாதையில் திட்டமிட்டபடி செயற்கைக்கோளை ராக்கெட் வெற்றிகரமாக நிறுத்தியது.இந்த செயற்கைக்கோள் குறைந்தபட்சம் 170 கி.மீ., அதிகபட்சம் 36,577 கி.மீ., சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும்.இதன் ஆயுள் காலம் 10 ஆண்டுகள். செயற்கைக்கோளில் 'எல் 1, எல் 5, சி மற்றும் எஸ் பேன்ட் 'டிரான்ஸ்பான்டர்கள்' உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.இதனால் இந்திய நிலப்பரப்பை தாண்டி 1500 கி.மீ., வரை துல்லியமான வழிகாட்டி, நேரம், வேகம் சேவைகளை பெற முடியும். மேலும் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்க முடியும். பேரிடர் காலங்களில் வானிலை தொடர்பான தகவல்களை துல்லியமாக பெற முடியும். அதிக மகசூல் தரக்கூடிய நிலங்களை கண்டறிதல், நில அளவை பணி, எல்லை பாதுகாப்புக்கு போன்றவற்றுக்கு செயற்கைக்கோள் உதவும்.ஜி.எஸ்.எல்.வி., - எப் 15 ராக்கெட் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ஏவப்பட்ட 100வது ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது. அதில் 91 வெற்றியும், 9 தோல்வியும் அடைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ