உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுத்த தலைமுறை ராக்கெட் தயாரிக்கிறது இஸ்ரோ

அடுத்த தலைமுறை ராக்கெட் தயாரிக்கிறது இஸ்ரோ

மதுரை:இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ கீழ் செயல்படும், திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள, திரவ உந்துசக்தி அமைப்பு மையமான, எல்.பி.எஸ்.சி., இயக்குனர் நாராயணன், நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, சில திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக, சந்திராயன் - 4 திட்டம்; நிலவில் இறங்கி, அங்கு மணல் எடுத்து, மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்யும் முயற்சி.அடுத்த கட்டமாக, வீனஸ் கோளிற்கு செயற்கைக்கோளை ஏவுவது. அது வித்தியாசமான கோளாகும். அங்கு வெப்பநிலை 420 டிகிரி செல்ஷியஸிற்கு மேல் இருக்கும்.மத்திய அரசு வழிகாட்டுதல்படி புதிய திட்டங்களுக்காக, நிறைய முயற்சிகளை செய்கிறோம். குறிப்பாக, என்.ஜி.எல்.வி., எனும், 'நெக்ஸ்ட் ஜெனரேஷன் லாஞ்ச் வெகிகிள்' எனப்படும் ஏவு வாகனத்திற்கு, திரவ ஆக்சிஜன், மீத்தேனை பயன்படுத்தக்கூடிய, 110 டன் உந்துசக்தி தரக்கூடிய இன்ஜினை வடிவமைத்து வருகிறோம்.இந்த ராக்கெட்டை, எல்.பி.எஸ்.சி., விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், மகேந்திரகிரி ஐ.பி.ஆர்.சி., ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையம் இணைந்து தயாரிக்க துவங்கியுள்ளோம்.இந்த ராக்கெட்டின் முதல்நிலை திரவ ஆக்சிஜன், மீத்தேனில் இயங்கக் கூடியது. 110 டன் உந்துசக்தி திறன் கொண்ட ஒன்பது இயந்திரங்களை பயன்படுத்தி இயங்கக் கூடியது. 2வது நிலை, 120 டன் உந்துசக்தி, திரவ ஆக்சிஜன், மீத்தேனுடன் 2 இன்ஜின்களை வைத்து இயங்கும். 3வது நிலை புதிதாக உருவாக்கப்பட்ட சி 32 கிரையோஜெனிக் இன்ஜினால், திரவ ஆக்சிஜன், திரவ ஹைட்ரஜனால் இயங்க செய்வது.இதில் எரிபொருள் கொண்ட இரு உறுப்பு கலன்கள் உண்டு. ஒவ்வொன்றிலும் 160 டன் திட நிலை எரிபொருள் கொண்ட, சாலிடு மோட்டாரை பயன்படுத்த உள்ளோம். இந்த சக்தி வாய்ந்த ராக்கெட்டை, மீண்டும் மீண்டும் 15 முறை பயன்படுத்தும் வகையில் தயாரிக்க உள்ளோம். இதன்மூலம் அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை அனுப்ப முடியும்; மனிதர்களை அனுப்ப முடியும். 2035ல் இந்தியா உருவாக்க உள்ள விண்வெளி ஆய்வு மையத்திற்கும் செல்ல முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ