உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., - சி 61 ராக்கெட் 3வது நிலையில் ஏற்பட்ட கோளாறால் தோல்வி

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., - சி 61 ராக்கெட் 3வது நிலையில் ஏற்பட்ட கோளாறால் தோல்வி

சென்னை: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, நேற்று விண்ணில் ஏவப்பட்ட, 'பி.எஸ்.எல்.வி., - சி 61' ராக்கெட்டின் மூன்றாவது நிலையில், திடமோட்டாரில் ஏற்பட்ட அழுத்தம் குறைவால், 'இ.ஓ.எஸ்., - 09' செயற்கைக்கோளை புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தும் திட்டம் தோல்வி அடைந்தது. நம் நாட்டின் எல்லை கண்காணிப்பு, தகவல் தொடர்பு போன்றவற்றுக்காக, செயற்கைக்கோள்களை உருவாக்கி, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்டுகள் உதவியுடன், 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.

பாய்ந்தது

அந்த வரிசையில், இரவு நேரம், கனமழை, கடும் பனிப்பொழிவு உட்பட எந்த கால நிலையிலும், பூமியை மிக துல்லியமாக புகைப்படம் எடுத்து, கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப, 1,696.24 கிலோ எடையில், 'இ.ஓ.எஸ்., - 09' செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. இதை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி., - சி 61 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின், முதலாவது ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை, 5:59 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.ராக்கெட் விண்ணில் ஏவ தயாராக இருந்தது முதல், அதன் ஒவ்வொரு நிலைகளின் பயண விபரம் குறித்து, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை மற்றும் செய்தியாளர்கள் மையத்தில், உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது. ராக்கெட் புறப்பட்டதில் இருந்து, 8வது நிமிடம், 25வது விநாடியில், தகவல் தெரிவிப்பது திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், அடுத்தது என்ன என்ற பரபரப்பு ஏற்பட்டது.பின், இஸ்ரோ தலைவர் நாராயணன், ''இஸ்ரோவின், 101வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி., - சி 61னின் முதல் இரண்டு நிலைகளின் செயல்பாடுகள் சரியாக இருந்தன; மூன்றாவது நிலை பிரியும் போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை. ''தவறுக்கான காரணத்தை ஆய்வு செய்து மீண்டு வருவோம்,'' என்று விஞ்ஞானிகளிடம் தெரிவித்தார்.

மூன்றாவது ராக்கெட்

நேற்று விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., - சி 61 ராக்கெட், பி.எஸ்.எல்.வி., வகையில், 63வது ராக்கெட். இதுவரை ஏவப்பட்டதில், 1993, 2017ல் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் மட்டுமே தோல்வியில் முடிவடைந்தன. மற்ற அனைத்தும் வெற்றிகரமாக செயல்பட்டன. நேற்று பூமியை கண்காணிக்கும் இ.ஓ.எஸ்., - 09 செயற்கைக்கோளை சுமந்து சென்ற பி.எஸ்.எல்.வி., தோல்வி அடைந்த மூன்றா வது ராக்கெட்டாகும்.இதுகுறித்து, நாராயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பி.எஸ்.எல்.வி., - சி 61 ராக்கெட் நான்கு நிலைகளை உடையது. முதல் இரண்டு நிலைகள் சிறப்பாக செயல்பட்டன. மூன்றாவது நிலையில் உள்ள திடமோட்டாரில் ஏற்பட்ட அழுத்தம் குறைவு காரணமாக திட்டம் தோல்வி அடைந்துள்ளது,'' என்றார்.

விஞ்ஞானிகளுக்கு நெருக்கடி

பார்லிமென்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கான நிலைக்குழுவை சேர்ந்த, 18 எம்.பி.,க்கள் சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு, நேற்று முன்தினம் வந்தனர். அவர்களுடன் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம், 118 பேர் தங்கி, நேற்று ராக்கெட் ஏவுதலை பார்த்தனர். கடந்த ஒரு வாரமாகவே, எம்.பி.,க்கள் தங்குவதற்கான வசதிகளை செய்து கொடுக்கும் பணியில், இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் உட்பட பலரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதனால், விஞ்ஞானிகள் தங்களின் பணிகளில் கவனம் செலுத்த முடியாமல், கடும் நெருக்கடியில் இருந்து வந்ததாக, சதீஷ் தவான் ஆய்வு மைய பணியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !