தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'தந்தையின் கட்டுப்பாட்டில் உள்ள குழந்தைகளை, சட்டவிரோத காவலில் இருப்பதாக கூற முடியாது' என, தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், குழந்தைகளை ஒப்படைக்க கோரிய தாயின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த வைத்தியநாதன் - கிருஷ்ணப்பிரியா தம்பதிக்கு, ஐந்தரை மற்றும் நான்கரை வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், வைத்தியநாதன் இரண்டு குழந்தைகளையும் வலுக்கட்டாயமாக தன்னுடன் அழைத்துச் சென்று விட்டதாகவும், குழந்தைகள் தற்போது எங்கு இருக்கின்றனர் என்பது தெரியாததால், குழந்தைகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தன்னிடம் ஒப்படைக்க, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும், சென்னை உயர் நீதிமன்றத்தில், கிருஷ்ணப்பிரியா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'சட்டவிரோத காவலில் இருந்தால் மட்டுமே ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய முடியும். 'இந்த வழக்கில், தந்தையிடம் குழந்தைகள் இருப்பதை சட்ட விரோத காவல் என்று கூற முடியாது. அதேநேரம், உரிய நிவாரணம் கோரி மனுதாரரான கிருஷ்ணப்பிரியா சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம்' எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.