சிலை கடத்தல் வழக்கு நீதிபதி விலகல்
சிலை கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணையில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவித்து உள்ளார். தமிழகத்தில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான, 41 சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் காணாமல் போனதாகவும், அது, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் இருந்து திருடப்பட்டு இருப்பதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி அபய் எஸ்.ஒஹா தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சமீபத் தில் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து இந்த வழக்கு, நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, கே.வி.விஸ்வநாதன் அமர்வில் நேற்று பட்டியலிடப்பட்டது. வழக்கு விசாரணை நடந்தபோது பேசிய நீதிபதி விஸ்வநாதன், ''நான் வழக்கறிஞராக இருந்தபோது சிலை கடத்தல் வழக்கில் ஆஜராகி இருக்கிறேன். ''எனவே நான் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க விரும்பவில்லை,'' எனக்கூறி, வழக்கை வேறொரு அமர்விற்கு பட்டியலிட பரிந்துரைத்து வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.