கடலம்மா மாநாடு: மீன் பிடித்து சீமான் ஆய்வு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
துாத்துக்குடி: ஏற்கனவே ஆடு மாடுகளுக்கும், மரங்களுக்கும் மாநாடு நடத்திய நாம் தமிழர் கட்சி சீமான், அடுத்ததாக கடல் மாநாடு நடத்தப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து, நேற்று திருச்செந்துார் பகுதியில், படகு வாயிலாக கடலுக்குச் சென்று ஆய்வு செய்தார். பின், மீன் பிடித்தார். நா.த.க., சார்பில் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து பேசுவதற்காக, அடுத்தமாதம் 15ல் துாத்துக்குடியில் கடல் மாநாடு நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக, நேற்று திருச்செந்துாருக்கு வந்த சீமான், அமலிநகர் கடற்கரைக்கு சென்றார். மீனவர்கள் மற்றும் நா.த.க. நிர்வாகிகளுடன் மீன்பிடிக்கும் படகில் கடலுக்கு சென்றார். கடற்கரையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலில் சென்ற சீமான், அங்கு மீனவர்களுடன் சேர்ந்து, மீன்பிடிக்கும் துாண்டில் வாயிலாக மீன் பிடித்தார். தொடர்ந்து, தன் கட்சி சார்பில் நடத்தப்படும் 'கடலம்மா' மாநாட்டிற்காக, மீனவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார். 'கடலம்மா' மாநாடு வாயிலாக, மீனவர்களையும், மீன் வளத்தையும், மீன் பிடி தொழிலையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சீமான் தெரிவித்தார். பின் அவர் அளித்த பேட்டி: பா.ஜ., தான் கொள்கை எதிரி என விஜய் சொல்கிறார். ஆனால், கரூர் சம்பவத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பா.ஜ.,வினர் செயல்படுகின்றனர். கரூருக்கு வந்த பா.ஜ., குழுவும், நடிகர் விஜய்க்கு ஆதரவாக செயல்பட்டுஉள்ளது. பிரசார பயணம் என்ற பெயரில், நடு ஊருக்குள் பிரசார வேனில் விஜய் சென்றதுதான், மொத்த பிரச்னைக்கும் காரணம். அதனால், நடந்த சம்பவத்துக்கு விஜய்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். அரசைக் குற்றஞ்சாட்டுவது பிரச்னையை திசை திருப்பும் முயற்சி. விஜயை எப்படியாவது தங்கள் கூட்டணிக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என, பா.ஜ.,வினர் தலையால் தண்ணீர் குடிக்கின்றனர். தமிழர் ஒருவருக்கு பிரதமர் பதவி கொடுக்காத பா.ஜ.,வினர், துணை ஜனாதிபதி பதவியை கொடுக்கின்றனர். எதிர்காலத்திலாவது, சுழற்சி முறையில் ஜனாதிபதி பதவியை மாநிலங்கள் வாரியாக கொடுக்க வேண்டும். இது என்னுடைய கோரிக்கை. நிறைவேறுமா என தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.