காரைக்கால் - பேரளம் அகலப்பாதை பயணியர் ரயில் சேவை தொடங்கியது
காரைக்கால்: காரைக்கால் - திருநள்ளாறு - பேரளம் அகலப்பாதையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு பயணியர் ரயில் சேவை தொடங்கியது. புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு - பேரளம் இடையே 23.5 கி.மீ., தொலைவுக்கு கடந்த 1952ல் மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டு, ரயில் சேவை தொடங்கப்பட்டது. போதிய வருவாய் இல்லாததால், 1986ல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால், 320.64 கோடி மதிப்பில் காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதை பணி புத்துயிர் பெற்றது. பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த மே 23ம் தேதி ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. எனினும் அதன்பிறகு பயணியர் ரயில் இயக்கப்படாமல், நிலக்கரி ஏற்றி செல்லும் ரயில் மட்டும் இயக்கப்பட்டது. இந்நிலையில், காரைக்கால் - பேரளம் அகலப்பாதையில் பயணியர் ரயில் சேவை நேற்று தொடங்கியது. காரைக்கால் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்பட்ட ரயில், திருநள்ளாறு ரயில் நிலையத்திற்கு மதியம் 1:05 மணிக்கு வந்தடைந்தது. திருநள்ளாறு ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் மற்றும் பா.ஜ., சார்பில், ரயிலை மலர் துாவி வரவேற்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு பின், காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் பயணியர் ரயில் இயக்கப்பட்டது, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காரைக்கால் - -திருநள்ளாறு - பேரளம் அகலப்பாதையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு பயணியர் ரயில் சேவை நேற்று தொடங்கியது. இந்த ரயிலில் பயணிக்க ஆர்வத்துடன் குவிந்த பொது மக்கள்.