உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க. நிர்வாகியிடம் கரூர் போலீசார் விசாரணை

த.வெ.க. நிர்வாகியிடம் கரூர் போலீசார் விசாரணை

சென்னை: த.வெ.க., நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிடம் கரூர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தினர். கரூரில், த.வெ.க., தலைவர் விஜய், செப்.,27 ம் தேதி நடத்திய பிரசார கூட்டத்தில் ஒன்பது குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக, த.வெ.க., பொதுச் செயலர் ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது கரூர் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாவட்ட செயலர் உள்ளிட்டோரையும் கைது செய்து உள்ளனர். இந்நிலையில், சென்னை போயஸ்கார்டனில் உள்ள, த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா அலுவலகத்தில் கரூர் மாவட்ட போலீசார் நேற்று அவரிடம் விசாரணை நடத்தினர். விஜய் பங்கேற்கும் கூட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை செய்வதில் ஆதவ் அர்ஜுனா முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவர் தான், த.வெ.க.,வின் தகவல் தொழில் நுட்ப பிரிவையும் நிர்வகித்து வருகிறார். அதன் அடிப்படையில் தான், கரூர் மாவட்ட போலீசார் ஆதவ் அர்ஜுனாவுடன் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும், கரூரில் விஜய் பிரசாரம் செய்த போது, 'ட்ரோன்' வாயிலாக வீடியோ எடுத்தது, கூட்டத்தை பதிவு செய்து ஆவணப்படுத்தும் பணியிலும் ஆதவ் அர்ஜுனா ஈடுபட்டுள்ளார். இதனால், கரூரில் விஜய் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி, கூட்டத்தில் விஷமிகள் உள்ளே நுழைந்து ஏதேனும் விபரீதமான செயலில் ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரிக்க, ஆதவ் அர்ஜுனாவிடம் உள்ள ஆதாரங்களை ஒப்படைக்குமாறு கரூர் மாவட்ட போலீசார் கடிதம் வாயிலாக உத்தரவு பிறப்பித்துள்ளார். தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதற்கிடையே, ஆதவ் அர்ஜுனா மீது, சென்னை மாநகர வடக்கு மண்டல சைபர் குற்றப் பிரிவு போலீசார், இந்திய இறையாண்மைக்கு எதிராக பதிவு வெளியிட்டது உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்யவும் தீவிரம் காட்டி வருகின்றனர். நிர்மல் குமார் எங்கே? இந்நிலையில், கரூர் மாவட்ட போலீசார், சென்னையில் வசித்து வரும் த.வெ.க., இணை பொதுச்செயலர் நிர்மல் குமாரின் உதவியாளர் சதீஷ் குமாரிடம் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது, 'நிர்மல் குமார் உங்களிடம் மொபைல் போனில் கடைசியாக எப்போது பேசினார். நீங்கள் ஏன் மொபைல் போனை சுவிட் ஆப் செய்துள்ளீர்கள்' என்பது உட்பட பல கேள்விகள் கேட்டு, அவர் அளித்த பதிலை வீடியோ பதிவும் செய்து கொண்டனர்.

மூன்று தனிப்படைகள் அமைப்பு

தலைமறைவாக இருக்கும், த.வெ.க., பொதுச் செயலர் ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலர் நிர்மல் குமார் ஆகியோரை கைது செய்ய மூன்று தனிப்படைகளை அமைத்து, மத்திய மண்டல ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் தேடுதல் வேட்டை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை