உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்ட பஞ்சாயத்து ஏ.டி.ஜி.பி., கைது: எம்.எல்.ஏ.,வுக்கு கடும் எச்சரிக்கை ஐகோர்ட் அதிரடி

கட்ட பஞ்சாயத்து ஏ.டி.ஜி.பி., கைது: எம்.எல்.ஏ.,வுக்கு கடும் எச்சரிக்கை ஐகோர்ட் அதிரடி

சென்னை: சென்னை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவை தொடர்ந்து, காதல் திருமண விவகாரத்தில், சிறுவன் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு, புரட்சி பாரதம் கட்சி எம்.எல்.ஏ., ஜெகன்மூர்த்திக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த காளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகன் தனுஷ், 23. இவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ, 21, என்பவரை, சமூக வலைதளம் வாயிலாக காதலித்து, பதிவு திருமணம் செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m947u9zg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், விஜயஸ்ரீயின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

உதவியை நாடினார்

காதல் விவகாரம் தொடர்பாக, விஜயஸ்ரீயின் தந்தை வனராஜ், 55, சென்னை பூந்தமல்லி ஆண்டர்சன்பேட்டையைச் சேர்ந்த, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெகன்மூர்த்தி உதவியை நாடியதாக கூறப்படுகிறது.அவரது ஆலோசனையின்படி, ஐ.பி.எஸ்., அதிகாரியான கூடுதல் டி.ஜி.பி., ஒருவரின் காரில், தனுஷ் தம்பியான, 17 வயது சிறுவனை கடத்தி, மீண்டும் வீட்டின் அருகே விட்டுள்ளனர். இது தொடர்பாக, தனுஷ் தாய் அளித்த புகாரில், எம்.எல்.ஏ., ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக, ஆள் கடத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ், திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்தச் சம்பவத்தில், பெண்ணின் தந்தை உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். எம்.எல்.ஏ., ஜெகன் மூர்த்தியை கைது செய்ய அவரது கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜெகன் மூர்த்தி மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன், நேற்று காலை விசாரணைக்கு வந்தது. ஜெகன்மூர்த்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் மற்றும் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகினர். அப்போது, 'கடத்தல் வழக்கில் மனுதாரருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு கட்சியின் தலைவராகவும், எம்.எல்.ஏ.,வாகவும் உள்ளார். அவரை கைது செய்ய, 100க்கும் மேற்பட்ட போலீசார் திரண்டதால், அப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவுகிறது' என்று வாதிடப்பட்டது.காவல்துறை தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் வாதாடியதாவது:வழக்கில் இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், மனுதாரரின் பங்கு குறித்து குறிப்பிட்டு உள்ளார்.

பணம் பறிமுதல்

கடத்தப்பட்ட சிறுவன், காவல் துறை வாகனத்தில் திரும்ப கொண்டு வந்து விடப்பட்டு உள்ளார். கடத்தலுக்கும், ஏ.டி.ஜி.பி.,க்கும் உள்ள தொடர்பு குறித்து, மனுதாரரை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து, 7.5 லட்சம் ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் வாதாடினார்.இதைக் கேட்ட நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக, ஏ.டி.ஜி.பி., மீது வழக்கு பதியப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். அத்துடன், பிற்பகலில் நேரில் ஆஜராகும்படி, ஜெகன்மூர்த்திக்கும், ஏ.டி.ஜி.பி., ஜெயராமுக்கும் உத்தரவிட்டார். நேரில் ஆஜராகாவிட்டால், ஏ.டி.ஜி.பி.,யை கைது செய்து ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டு, பிற்பகலுக்கு விசாரணையை தள்ளிவைத்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை பிற்பகல் 2:35 மணிக்கு துவங்கியது. அப்போது, ஜெகன்மூர்த்தி, ஏ.டி.ஜி.பி., ஜெயராம் ஆகியோர் ஆஜராகினர். ஜெகன்மூர்த்தி தரப்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ''கூலிப்படையினர் யாரும் கடத்தலில் ஈடுபடுத்தப்படவில்லை. கூலிப்படையினரை ஈடுபடுத்தியதாக, காவல் துறை கூறுவது தவறு. கடத்தலில் மனுதாரருக்கு எந்த தொடர்பும் இல்லை. காவல் துறையில் உள்ள பிரச்னையால், ஒரு அதிகாரியை இழுக்க முயற்சிக்கின்றனர்,'' என்றார்.காவல் துறை தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் வாதாடியதாவது:வழக்கில் கைதான புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் உள்ளிட்டோர், தனுஷ் வீட்டுக்கு சென்று, அவரது தம்பியை கடத்தியுள்ளனர். அருகில் இருக்கும் ஓட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். 'சிசிடிவி' காட்சிகள் உள்ளன. இந்த விவகாரத்தில் ஜெகன் மூர்த்தியிடம், ஏ.டி.ஜி.பி., பேசியிருக்கிறார். ஜெகன் மூர்த்திக்கு, இந்த கடத்தலில் தொடர்பு உள்ளது. கைதான வழக்கறிஞர், முன்னாள் காவலர் ஆகியோர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஏ.டி.ஜி.பி.,யும், அவரது டிரைவர்களும் விசாரிக்கப்படுவர். விசாரணைக்கு எம்.எல்.ஏ.,வை அழைத்த போது, அவரது ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீட்டின் முன் திரண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து நீதிபதி, வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏ.டி.ஜி.பி., ஜெயராமை கைது செய்யும்படி உத்தரவிட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.அதற்கு நீதிபதி, 'எம்.எல்.ஏ.,வையும், ஏ.டி.ஜி.பி.,யையும் சமமாக கருத முடியாது. ஓட்டளித்த மக்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க, எம்.எல்.ஏ.,வுக்கு உத்தரவிடப்படுகிறது. அரசு ஊழியருக்கு இந்த சலுகையை வழங்க முடியாது. தவறு செய்யும் அனைத்து அதிகாரிகளுக்கும், இது ஒரு செய்தியாக இருக்கட்டும்' என்றார்.முன்ஜாமின் மனு மீதான விசாரணையை, வரும், 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார். நீதிமன்றத்தில் ஆஜரான எம்.எல்.ஏ., ஜெகன் மூர்த்தியிடம், 'எந்த தொகுதி எம்.எல்.ஏ., நீங்கள்; எத்தனை ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள்; கட்சி துவங்கி எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன' என, நீதிபதி பி.வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.அதற்கு அவர், வேலுார் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியில், 70,000 ஓட்டுகள் பெற்று, 10,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், கட்சி துவங்கி 47 ஆண்டுகள் ஆவதாகவும் ஜெகன்மூர்த்தி பதிலளித்தார்.இதையடுத்து, நீதிபதி கூறியதாவது:தேர்தலில் உங்களுக்கு, 70,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் ஓட்டளித்துள்ளனர். உங்களுக்கு ஆதரவாக ஓட்டளித்தது, அவர்களின் குரலாக சட்டசபையில் பேசி சேவை செய்யத் தானே தவிர, கட்டப்பஞ்சாயத்து நடத்த அல்ல. மக்கள் எதற்காக உங்களுக்கு ஆதரவளித்தனர் என்பதை மறந்துள்ளீர்கள். கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் மக்கள் ஓட்டளித்தனரா?

சாதாரண மனிதரல்ல

சட்டசபைக்கு சென்று, மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவற்றை தீர்க்க முயற்சி செய்யுங்கள். இரண்டு பேர் திருமணம் செய்து கொண்டது, உங்கள் கட்சி விவகாரமா? நீங்கள் சாதாரண மனிதர் அல்ல; மக்கள் பிரதிநிதி. மூன்றாம் தர நபராக செயல்படக்கூடாது. ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தொகுதிக்கும் நீங்கள் தான் எம்.எல்.ஏ.,நீங்களே காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால், சாதாரண மக்கள் எப்படி ஒத்துழைப்பர்?எம்.எல்.ஏ., என்ற போர்வையை பயன்படுத்தி, பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமே தவிர, கட்டப்பஞ்சாயத்து செய்யக் கூடாது. கட்டப்பஞ்சாயத்து செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.போலீசாரை தடுக்கும் வகையில் ஆட்களை சேர்த்து செயல்பட்டால், வேறு மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும்.உங்களுக்கு ஓட்டளித்த மக்களுக்காகவே, உங்களை கைது செய்ய உத்தரவிடவில்லை. குற்றவாளிகளுக்கு ஆதரவாக மக்கள் பிரதிநிதிகள் செயல்படுவதை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது.உங்களுக்கு நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் கூட, உங்க பெயரை பயன்படுத்தினாலும் குற்றம் தான். ஓட்டளித்த மக்களை ஏமாற்றக்கூடாது. விசாரணைக்கு தனியாக செல்ல வேண்டும். கட்சி நிர்வாகிகளை உடன் அழைத்து செல்லக்கூடாது. உங்கள் ஆதரவாளர்கள் இதில் ஏன் வருகின்றனர்; இது அரசியலா? உங்கள் அனுமதியின்றி, கட்சி நிர்வாகிகள் ஒன்று கூடினால், அவர்களுக்கு நீங்கள் அறிவுரை கூறுங்கள். மக்கள் பிரதிநிதியான நீங்கள், தனியாக செல்ல பயப்பட வேண்டிய அவசியம் என்ன? சட்டம் இயற்றுபவர்களான நீங்களே, விசாரணைக்கு முன்வந்து ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டும்.

வேடிக்கை பார்க்காது

அனைத்து கட்சிகளும், மக்களை தவறாக வழிநடத்துகின்றன. கட்சி கூட்டம் என்றால், யாரை வேண்டுமானாலும் அழைத்து செல்லுங்கள். அதில் நீதிமன்றம் கேள்வி எழுப்பாது. ஆனால், இதுபோல கட்டப்பஞ்சாயத்து போன்ற விஷயங்களில் யார் ஈடுபட்டாலும், நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்காது.போலீசாரின் விசாரணையை தடுக்கும் வகையிலும், தனிப்பட்ட நபருக்காகவும் தேவையின்றி கூடுபவர்களை, மண்டபத்தில் வைத்து, பிரியாணி கொடுத்து, போலீசார் அனுப்பி விடுகின்றனர். அதை விடுத்து, அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார். '

சிறுவனை கடத்தி காயம் ஏற்படுத்தினர்

' காதல் திருமணம் செய்த தனுஷின் தாய் லட்சுமி, 44, அளித்த புகார் மீது, திருவாலங்காடு போலீசார், கடத்தல் உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதற்கான முதல் தகவல் அறிக்கையில், 'வீட்டு மாடியில் துாங்கிய சிறுவனான என் இளைய மகனை, முகம் தெரிந்த, முகவரி தெரியாத ஆண்கள் ஐந்து பேர், நள்ளிரவு 12:50 மணிக்கு, தமிழ்நாடு மற்றும் கேரளா பதிவு எண் கொண்ட காரில் கடத்திச் சென்றனர். 'அவரை உடல் மற்றும் மன ரீதியாக காயப்படுத்தி, அரசு வாகனத்தில் அதிகாலை 3:00 மணியளவில், பேரம்பாக்கம் பஸ் நிலையம் அருகே விட்டுச் சென்றுள்ளனர்' என, லட்சுமி தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ganesan
ஜூன் 17, 2025 16:29

இந்த MLA ஒரு ADMK alliance பார்ட்டி, ADGP ஒரு அதிமுக ஆதரவு /சப்போர்ட் IPS ஒபிபிசெர். அதனால் தான் தண்டனை கிடைத்திருக்கும் போல.


SIVA
ஜூன் 17, 2025 16:19

இங்கு நடைமுறையில் இரண்டு ஜாதி தான் ஒன்று அரசியல்வியாதி மற்றும் இவர்கள் நல்லது செய்வார்கள் என்று நம்பும் அப்பாவி பொதுமக்கள் , அல்லது பணம் உள்ளவன் , பணம் இல்லாதவன் அவ்வளுவுதான் ....


ARUMUGAM
ஜூன் 17, 2025 14:14

நீதிபதிக்கு.... ஒரு வீரமான சல்யூட்....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 17, 2025 13:15

திராவிட மாடலுக்கு இதுபோன்ற அதிகாரிகள்தான் தேவை ..... கர்நாடகத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் பரவாயில்லை ...... ஆனால் அதே கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பா [மாஜி துணைவேந்தர்] தான் அலர்ஜி .... காரணம் அவரது நேர்மை .....


ஜெய்ஹிந்த்புரம்
ஜூன் 17, 2025 20:37

உங்க கூட்டாளி ஆடீம்கா கூட்டணி எம்எல்ஏ ன்னு தெரிஞ்சே இப்படி பேசுறியா?


vijai hindu
ஜூன் 17, 2025 12:22

எம் எல் ஏ ஒரு பிராடு விட்டுட்டு அந்த ஆள புடிச்சு உள்ள போடணும் ஒரு ஜாதியை வச்சிக்கிட்டு அந்த ஆளு கட்சி நடத்திட்டு இருக்கான்


KRISHNAN R
ஜூன் 17, 2025 10:51

என்ன கொடுமை சார் இது


madhesh varan
ஜூன் 17, 2025 10:44

இவன் யாருன்னு தெரியுமா ? அதிமுக கூட கூட்டணி வச்சு ஜெயிச்ச எம் எல் எ, எடப்பாடி பழனிசாமி இப்போ என்ன பண்ணப்போற ? ஒரு கண்டனம் கூட சொல்லமாட்டா ? உனக்கு என்ன யோக்கியதை இருக்கு மத்தவங்கள விமர்சிக்க ?


Malarvizhi
ஜூன் 17, 2025 10:30

அரசு அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போட்டு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட வைப்பது அதே சட்டங்களை இயற்றும் அரசியல்வாதிகள் ஆனால் மக்கள் பிரதிநிதி என்பதால் அவருக்கு தண்டனை கிடையாதாம். இது என்னய்யா நியாயம்? உயர்நீதிமன்றத்திற்கே நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் வரும் அரசியல்வாதி, போலீஸ் ஸ்டேஷனுக்கு ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் சென்று, போலீசாருக்கு அழுத்தம் கொடுக்க மாட்டானா? இதில் பெரிய குற்றவாளி அரசியல்வாதிதான் ஓட்டுப்போட்ட மக்களுக்கு துரோகம் செய்திருக்கிறான். அரசியல்வாதி சொல்லித்தான் தவறு செய்தேன் என்று அரசு ஊழியரால் கோர்ட்டில் சொல்ல முடியாது ஏனெனில் கோர்ட்டுக்கு வெளியே அந்த அரசு ஊழியர் அரசியல்வாதியின் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும். இதனை கோர்ட் உணர்ந்து, மற்ற சாதாரண மக்களுக்கு வழங்குவதைவிட அரசியல்வாதிகளுக்கு அதிக தண்டனை வழங்க வேண்டும். அதுதான் நியாயம்.


V RAMASWAMY
ஜூன் 17, 2025 10:25

முதன் முதல் பிரதம மந்திரியான அன்றே நமது போற்றக்கூடிய திரு மோடி அவர்கள் மிகவும் கண்ணியத்துடனும் பணிவுடனும் சொன்ன வார்த்தைகள் " நான் உங்கள் முதல் சேவகன்" என்பது தான். அதுபோல் நடந்து கொள்ளாமல் தங்களை மக்களின் முதலாளி/ மன்னர் போன்ற மமதையுடன் செயல்பட்டு மக்களை தங்கள் கூலிகளைப்போல் ஏளனமுடன் ஏச்சுடன் பேசுவது நடத்துவது சரியல்ல. நம் நாட்டில் அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில், பஞ்சாயத் போர்டு மெம்பெர் முதல் எம் பி வரையிலான பதவிகளில் உள்ளோர், அது ஐந்து வருட காலத்திற்காக மக்களுக்கு சேவை செய்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்கால பதவி என்று தெரிந்தும் அதற்குள் தனது அந்தஸ்தை உயர்த்த்திக்கொள்ள செய்யும் நடவடிக்கைகளை கவனித்து ஐகோர்ட் கொடுத்த அதிரடி எச்சரிக்கை அத்தியாவசியமான ஒன்று.


Chandru
ஜூன் 17, 2025 09:28

Tis a pity that KV kuppam has a public representatives like jagan murthy