கவின் பெற்றோர் திடீர் போராட்டம்
துாத்துக்குடி: ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐ.டி., நிறுவன ஊழியர் கவின் செல்வகணேஷ், 26, பெற்றோர் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் சந்திரசேகர் –- தமிழ்செல்வி தம்பதி மகன் கவின் செல்வகணேஷ். பட்டியலினத்தை சேர்ந்த இவர், மாற்று சமூக பெண் ஒருவருடன் பழகியதால், கடந்த ஜூலை மாதம் நெல்லையில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித், 24, கைது செய்யப்பட்டார். சுர்ஜிதின் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர் எஸ்.ஐ.,யாக பணிபுரிகின்றனர். அவர்கள் இருவரையும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்த நிலையில், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. ‘கவின் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்’ என, வலியுறுத்தி கவின் பெற்றோர், வீட்டின் முன் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்’ எனவும் அவர்கள் தெரிவித்தனர்.