சிறுவாணி அணை குடிநீரின் அளவை குறைத்தது கேரள அரசு; தமிழக அரசு பேச்சு நடத்த எதிர்பார்ப்பு
கோவை: சிறுவாணி அணையில் இருந்து, கோவைக்கு வழங்கும் தண்ணீரின் அளவை, கேரள நீர்ப்பாசனத்துறை குறைத்திருக்கிறது. நாளொன்றுக்கு, 3 கோடி லிட்டர் தண்ணீர் குறைவாகவே கிடைப்பதால், கேரள அரசுடன் தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.கோவை மாவட்டத்துக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில் இருந்து, ஜனவரி வரை, நாளொன்றுக்கு 7.7 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டது. தற்போது 4.7 கோடி லிட்டரே பெறப்படுகிறது; 3 கோடி லிட்டர் குறைக்கப்பட்டுள்ளது.அதேபோல், 10 ஊராட்சிகள், ஏழு பேரூராட்சிகளுக்கு நாளொன்றுக்கு, 1.8 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு வந்தது. இப்போது, 1.2 கோடி லிட்டரே பெறப்படுகிறது.கேரள நீர்ப்பாசனத்துறைக்கு தமிழக குடிநீர் வடிகால் வாரியம், 13 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது. அத்தொகையை வழங்காததால், 3.6 கோடி லிட்டர் குடிநீர் சப்ளை அளவு குறைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நிலுவைத் தொகையில், இதுவரை, ஆறு கோடி ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள தொகையை செலுத்தியோ அல்லது கேரள அரசுடன் பேச்சு நடத்தியோ, தினமும், 7.7 கோடி லிட்டர் குடிநீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று நடந்த சட்டசபை கூட்டத் தொடரில், எதிர்க்கட்சி கொறடா வேலுமணி வலியுறுத்தினார்.இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''கேரள அரசுக்கு வழங்க வேண்டிய தொகை, குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக படிப்படியாக கொடுக்கப்படுகிறது. இதுவரை ஆறு கோடி ரூபாய் வழங்கியுள்ளோம்.அடுத்தடுத்து இரண்டு கோடி ரூபாய் வீதம் வழங்கப்படும். சிறுவாணியில் இருந்து வராவிட்டால், மேலாண்மை செய்ய முடியாது என்கிற நிலை இல்லை. மாற்று ஏற்பாடாக பவானியில் இருந்து தேவையான அளவு எடுத்து, மக்களுக்கு சப்ளை செய்கிறோம். நாளொன்றுக்கு, 30 கோடி லிட்டர் தருவிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.ஜூன் வரை குடிநீர் தட்டுப்பாடு வராது. இருந்தாலும், சிறுவாணியில் இருந்து எவ்வளவு தண்ணீர் எடுக்க வேண்டுமோ, அந்த அளவு எடுப்பதற்கு, தொகையை செலுத்தி வருகிறோம். கேரள அரசுடன் தமிழக அரசு பேச்சு நடத்தும்; அதற்கான பணியை குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொள்ளும்,'' என்றார்.