உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு

புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு

சென்னை:சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, கே.ஆர்.ஸ்ரீராம் நேற்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ரவி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி.கங்காபுர்வாலா, மே 23ல் ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமிக்கப்பட்டார். பின், உச்ச நீதிமன்ற நீதிபதியாக, ஆர்.மகாதேவன் நியமிக்கப்பட்டார். இதனால், பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டார்.மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பெயரை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, கடந்த ஜூலையில் கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது. கடந்த வாரம் அவரை நியமித்து, ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். சென்னை கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் நேற்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ரவி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதிக்கு மலர் கொத்து வழங்கி, கவர்னர் வாழ்த்து தெரிவித்தார். கவர்னருக்கு தலைமை நீதிபதியும் மலர் கொத்து வழங்கினார். பின், பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், புதிய தலைமை நீதிபதிக்கு மலர் கொத்து வழங்கினார். தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.பதவியேற்பு நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, நாகப்பன், இந்திரா பானர்ஜி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழ் பேச தெரிந்தவர்

புதிய தலைமை நீதிபதிக்கு, உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வரவேற்றுப் பேசும் போது, ''தமிழ் பேச தெரிந்த தலைமை நீதிபதியை, 43 ஆண்டுகளுக்கு பின் பெற்றுள்ளோம். நீதி பரிபாலனத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்,'' என்றார்.'தமிழ் தாய்க்கு முதல் வணக்கம்; சகோதர, சகோதரிகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்' என, தமிழில் ஏற்புரையை, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் துவங்கினார். தொடர்ந்து, தலைமை நீதிபதி பேசியதாவது:பள்ளியில் தமிழ் படித்துள்ளேன். 500க்கும் மேற்பட்ட திருக்குறள்களை மனப்பாடம் செய்திருந்தேன். ஆனால், இன்று, 'கற்க கசடற' என்ற குரல் மட்டுமே நினைவில் உள்ளது. தமிழகத்தின் பாரம்பரியம், கலாசாரம், உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.நீதிமன்றம் சுமூகமாக இயங்க, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.சமன் செய்து சீர்துாக்கி, சொற்கோட்டம் ஆகிய குறள்களை மேற்கோள் காட்டி, தலைமை நீதிபதி நன்றி தெரிவித்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர்களும், புதிய தலைமை நீதிபதியை வரவேற்றுப் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ