உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சம வேலைக்கு சம ஊதியம் கோரி தொழிலாளர் ஆணையரகம் முற்றுகை 

 சம வேலைக்கு சம ஊதியம் கோரி தொழிலாளர் ஆணையரகம் முற்றுகை 

சென்னை: 'சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்' என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கத்தினர், சென்னையில் நேற்று தொழிலாளர் ஆணையரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதாரம் சார்ந்த போலியோ, டைபாய்டு, மக்களை தேடி மருத்துவம், உங்களுடன் ஸ்டாலின் போன்ற 14 வகையான சுகாதார திட்டப்பணியில், 4,800க்கும் அதிகமான இடைநிலை சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், தேசிய நலவாழ்வு குழும திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இதே திட்டத்தில் மற்ற மாநிலங்களில் பணியாற்றுவோர், 40,000 ரூபாய்க்கு மேல் ஊதியம் பெறும் நிலையில், தமிழகத்தில் 18,900 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்கக்கோரி, தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கத்தினர், சென்னை அண்ணா நகரில் உள்ள தொழிலாளர் ஆணையரகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுதும் இருந்து வந்திருந்தோர், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து போலீசார் குவிக்கப்பட்டனர். வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்லாமல் இருக்க நுழைவாயில் பகுதி அடைக்கப்பட்டது. போலீசார் நடத்திய பேச்சில், கோரிக்கை நிறைவேறும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். இதற்கிடையே, சங்கத்தின் தலைவர் சுந்தரி, செயலர் ஜெயசூர்யா உள்ளிட்ட நிர்வாகிகள், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் மற்றும் தொழிலாளர் ஆணைய கமிஷனர் ஆகியோருடன் பேச்சு நடத்தினர். அவர்கள் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் வருவதால், அத்திட்ட இயக்குநருடன் பேசி தீர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் சில கோரிக்கைகளை அரசு தரப்பு ஏற்றதால் நேற்றிரவு போராட்டத்தை கைவிட்டனர். மாற்றுத்திறனாளிகள் 'அரசு துறைகளில் தற்காலிகமாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து துறை மாற்றுத்திறனாளிகள் பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று போராட்டம் நடைபெற்றது. குடும்பத்தினருடன் நடந்த இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு, கூட்டமைப்பின் தலைவர் சுதர்சன் தலைமை வகித்தார். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மின் ஊழியர்கள் மத்திய அரசின் மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக மின் வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகம் நுழைவாயில் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிறப்பாசிரியர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, கடந்த சில ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக, சென்னை சிவானந்தா சாலையில் நேற்று, தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. அதில், ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை