உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நில வழிகாட்டி மதிப்புகள் விரைவில் சீரமைப்பு

 நில வழிகாட்டி மதிப்புகள் விரைவில் சீரமைப்பு

சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகளை எளிமைப்படுத்துவது, வழிகாட்டி மதிப்புகளை சீரமைப்பது குறித்து, முதல்வர் விஜய் தலைமையில் இதற்கான உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடந்தது. தமிழகத்தில் 2012ம் ஆண்டுக்கு பின், நில வழிகாட்டி மதிப்புகள் ஒட்டுமொத்த அளவில் சீரமைக்கப்படவில்லை. இதனால், நகர்ப்புற பகுதிகளில் சந்தை நிலவரத்துக்கும், வழிகாட்டி மதிப்புக்கும் வேறுபாடு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, சொத்து விற்பனை பத்திரப்பதிவில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக, சமீபத்தில் நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டது. இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக்கான உயர் மட்ட குழு கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் வீடு, மனை விற்பனை பத்திரப்பதிவை எளிமைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள், முதல்வருக்கு விளக்கப்பட்டன. நில வழிகாட்டி மதிப்புகள் சீரமைப்புக்கான பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதற்காக நில வழிகாட்டி மதிப்பு சீரமைப்பு உயர் மட்ட குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கூட்டத்தில் பங்கேற்றனர். வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும், கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. விரைவில் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆய்வு கூட்டம் ரத்து

முதல்வர் விஜய் கடந்த 2ம் தேதி முதல், துறை வாரியாக ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி, நேற்று காலை உயர் கல்வித்துறை, பிற்பகலில் பள்ளி கல்வித்துறை ஆய்வு கூட்டம் நடக்க இருந்தது. அதன்படி, உயர் கல்வித்துறை ஆய்வு கூட்டம் நடந்தது. ஆனால், பள்ளி கல்வித்துறை ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அந்த துறை அமைச்சர் ராஜ்மோகன் அமெரிக்கா சென்றுள்ளதால், ஆய்வு கூட்டத்தை முதல்வர் விஜய் ரத்து செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி