நில அபகரிப்பு வழக்கு: தி.மு.க.,வினர் ஜாமின் மனு ஐகோர்ட் தள்ளிவைப்பு :நால்வருக்கு முன்ஜாமின்
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் நில அபகரிப்பு வழக்கில் கைதான தி.மு.க., நகர செயலர் தளபதி உட்பட மூவரது ஜாமின் மனு மீதான விசாரணையை, ஆக., 8க்கு மதுரை ஐகோர்ட் கிளை தள்ளிவைத்தது. இதே வழக்கில் நால்வருக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டது. ஒருவரது முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. திருமங்கலத்தை சேர்ந்த சிவனாண்டி, அவரது மனைவி பாப்பா ஆகியோருக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதாக, தளபதி உட்பட 12 பேர் மீது, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் கைதான தளபதி, திருமங்கலம் யூனியன் சேர்மன் கொடி சந்திரசேகர், திருப்பரங்குன்றம் நகர செயலர் கிருஷ்ணபாண்டியன் ஜாமின் மனு, நீதிபதி ஆர்.மாலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் சண்முகசுந்தரம், ரவி ஆஜராகினர். அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியம், போலீசாரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் கேட்டார். அதை ஏற்று, விசாரணையை ஆக., 8க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதே வழக்கில் முன்ஜாமின் கோரி, தி.மு.க.,வை சேர்ந்த கிருஷ்ணசாமி, வழக்கறிஞர் முரளி, சேதுராமன் மற்றும் நரேஷ்குமார், ரங்கராஜ் ஆகியோர் மனு செய்தனர். அவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் இளங்கோ, திலக், சுபாஷ்பாபு, மீனாட்சிசுந்தரம் ஆஜராகினர். சேதுராமன் மனுவை வாபஸ் பெறுவதாக அவரது வழக்கறிஞர் ஜெகநாதன் தெரிவித்தார். அதையடுத்து, அவரது மனுவை மட்டும் நீதிபதி தள்ளுபடி செய்தார். கிருஷ்ணசாமி உட்பட நால்வருக்கு முன்ஜாமின் வழங்கி நீதிபதி ஆர்.மாலா உத்தரவிட்டார்.