தொழில்நுட்ப வளர்ச்சியை வழக்கறிஞர்கள் பயன்படுத்த வேண்டும்: நீதிபதி கிருஷ்ணகுமார்
திருவாலங்காடு:திருவள்ளூர் அடுத்த பட்டரைப்பெரும்புதுாரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரியில், 4ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டத்துறை செயலர் ஜார்ஜ் அலெக்சாண்டர் மற்றும் சட்டக் கல்வி இயக்ககத்தின் இயக்குனர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில் 675 இளங்கலை பட்டதாரி, 175 முதுநிலை பட்டதாரி என மொத்தம் 850 மாணவ - மாணவியருக்கு பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டது.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமை வகித்து பேசியதாவது:சென்னை சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள், ஜனாதிபதி, அரசியல்வாதி, நீதிபதி என அனைத்து துறைகளிலும் சிறந்த முறையில் பங்காற்றுகின்றனர்.இந்த கல்லுாரி சட்டக் கல்வியை மட்டும் போதிக்கவில்லை வாழ்க்கையை போதிக்கிறது. பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் நிறைய வழக்குகளை, தரமான வாதங்களை நீதிபதியிடம் முன் வைக்கும் திறன் உள்ள வழக்கறிஞர்களை தேர்வு செய்து அவர்களிடம் உதவியாளராக சேர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். முதலில் வாய்தா வாங்கத்தான் அனுப்புவார்கள். அதை தயக்கமின்றி முறையாக நீதிபதியிடம் கேட்டு பெற உங்களுக்கு ஓராண்டு ஆகலாம். தற்போது இளம் வழக்கறிஞர்கள் சிறந்த முறையில் பணி செய்கின்றனர்.தற்போது வளர்ச்சியடைந்துள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இளம் வழக்கறிஞர்கள் வளர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா, சட்டக்கல்லுாரி முதல்வர் கயல்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.