உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சினிமா பாடலில் வருவது போல் வாழ்க்கை 5 நிமிடத்தில் உயராது: டாக்டர் ராம்பிரசாத் அறிவுரை டாக்டர் ராம்பிரசாத் அறிவுரை

சினிமா பாடலில் வருவது போல் வாழ்க்கை 5 நிமிடத்தில் உயராது: டாக்டர் ராம்பிரசாத் அறிவுரை டாக்டர் ராம்பிரசாத் அறிவுரை

சென்னை: ''சினிமா பாடலை போல், 5 நிமிடங்களில் வாழ்க்கை உயரத்திற்கு வந்துவிடாது. மாறாக கஷ்டம், புறக்கணிப்பு, அவமானம், இழிவு என, அனைத்தும் நிறைந்தவை என்பதால், மன உறுதியுடன் கடின உழைப்பு அவசியம்,'' என, பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் டாக்டர் ராம்பிரசாத் மனோகர் பேசினார். டாக்டர் ராம்பிரசாத் மனோகர் எழுதிய, 'கருவில் இருந்து கலெக்டர் வரை' என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னை மயிலாப்பூர், ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லுாரியில் நேற்று நடந்தது. கவர்னர் அலுவலக முதன்மை செயலர் கிர்லோஷ் குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் ஆனந்தகுமார் ஆகியோர் நுாலை வெளியிட்டனர். நுாலின் பிரதியை ஆசிரியரின் பெற்றோர் வரதராஜன் - சின்னத்தாய் மற்றும் காவல்துறை நிர்வாக பிரிவு ஐ.ஜி., பாலகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில், நுாலாசிரியர் ராம்பிரசாத் மனோகர் பேசியதாவது: பொதுவாக சமூகத்தில் வெற்றி குறித்து பேசப்படுவதை போல், தோல்வி குறித்து பேசப்படுவதில்லை. இந்த நுாலில் நான் கண்ட வெற்றியைவிட, தோல்விகள் குறித்து அதிகம் பகிர்ந்துள்ளேன். இது, வாசகர் இடையே தோல்வி குறித்த புரிதலை ஏற்படுத்தும். இதுவே, 'கருவில் இருந்து கலெக்டர் வரை' நுாலின் நோக்கம். என்னை போன்ற ஏழை, எளிய மாணவர்களை, வெற்றியை நோக்கி சிறகடிக்க வைப்பதை நோக்கமாக கொண்டு, நுால் எழுத துவங்கினேன். ஆறு ஆண்டு கடின உழைப்பிற்குப்பின், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த நாளில் நுாலை வெளியிடுவதில் மகிழ்ச்சி. பள்ளி அனுபவம் முதல் நான் அதிகாரியாகியது வரை, அனைத்தையும் பகிர்ந்துள்ளேன். வாழ்க்கை என்பது சினிமா பாடலைப் போல், 5 நிமிடங்களில் உயரத்திற்கு வந்துவிடாது. மாறாக, இந்த பயணம் கஷ்டம், புறக்கணிப்பு, அவமானம், இழிவு என, அனைத்தும் நிறைந்தவை. எனவே, மன உறுதியுடன் கடின உழைப்பு அவசியம். பொதுவாக, மனிதனுக்கு கனவு வரும்போது பயமும் சேர்ந்து வரும். இவை இரண்டும் வரும்பட்சத்தில், சுய சந்தேகம் மனிதனுக்கு அதிகரிக்கும். இதுபோன்ற சமயங்களில், பிறரின் ஆலோசனையில் நல்லனவற்றை மட்டும் எடுத்துக் கொள்வது அவசியம். 'கருவில் இருந்து கலெக்டர் வரை' புத்தக விற்பனை வாயிலாக கிடைக்கும் தொகையை ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு பயன் படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை