உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‘கேளுங்களேன்!’

‘கேளுங்களேன்!’

சென்னை: ‘நீங்கள் சொன்ன இரண்டு கோடி அ.தி.மு.க., தொண்டர்களில் ஒருவனான என் பேச்சை கேளுங்களேன்’ என, பொதுச்செயலர் பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் வேலுமணி பதில் அளித்துள்ளார்; மேலும், அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என, மீண்டும் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், அ.திமு.க., 47 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. த.வெ.க., 108 இடங்களில் வென்று, ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாமல் திணறியபோது, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றோர், த.வெ.க.,வுக்கு ஆதரவு அளித்து, ஆட்சியில் பங்கு பெற ஆலோசனை தெரிவித்தனர்; அதை, பழனிசாமி ஏற்கவில்லை. அதேநேரம் தி.மு.க.,வுடன் இணைந்து ஆட்சி அமைக்க, பழனிசாமி தரப்பில் முயற்சி நடந்தது. இது தொடர்பாக பழனிசாமிக்கும், வேலுமணி, சண்முகம் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சட்டசபையில், வேலுமணி, சண்முகம் தலைமையில் 27 அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள், த.வெ.க., ஆட்சிக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். அவர்களின் கட்சி பதவிகளை, பழனிசாமி பறித்தார். அப்போது ஏற்பட்ட கசப்பு இன்னும் மறையவில்லை. இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் கோவை வந்த பழனிசாமியிடம், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், ‘தி.மு.க.,விலிருந்து வைகோ பிரிந்து சென்றார். அவரிடமோ, தி.முக.,விடமோ, ஒருங்கிணைப்பு குறித்து கேட்கிறீர்களா? ‘அ.தி.மு.க.,வில் உள்ள இரண்டு கோடி தொண்டர்களில் ஒருவர் தான் வேலுமணி. அவரது பேச்சை கேட்டு, என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம்’ என, பழனிசாமி ஆவேசமாக பதில் அளித்தார். இது, வேலுமணி தரப்பை கொந்தளிக்க வைத்துள்ளது. பழனிசாமிக்கு பதில் அளித்து, வேலுமணி வெளியிட்ட அறிக்கை: என்னை உதாசீனப்படுத்துவதாக நினைத்து, இரண்டு கோடி தொண்டரில் ஒருவர் தான் வேலுமணி என சொல்லி இருந்தாலும், இதை விட எனக்கு வேறென்ன பெருமை இருக்கப் போகிறது. அ.தி.மு.க., தொண்டன் என்பது தான், என் முதல் அடையாளம்; என்னை தொண்டர்களில் ஒருவன் என சொன்னதற்கு நன்றி. இரண்டு கோடி தொண்டர்களால் தான், பொதுச்செயலர் பொறுப்பில் உள்ளீர்கள். கொடி பிடிக்கும் தொண்டன் தான், கட்சியின் ஆணி வேர். அந்த தொண்டன் ஒரு முடிவை எடுத்து விட்டால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பது தான், நல்ல தலைமைக்கு அழகு. எந்த பிரிவினையும் இல்லாமல் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று சொல்வது, வேலுமணி என்ற ஒரு தொண்டன் மட்டுமா? இரண்டு கோடி தொண்டரில் யாரை கேட்டாலும், இதைத்தான் சொல்வர். சசிகலா, தினகரன் ஆகியோர் தனிக் கட்சி ஆரம்பிக்கும் முன், பல முறை நம் கட்சியில் இணைந்து பணியாற்ற முன் வந்தனர். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர், தி.மு.க.,வுக்கு செல்லும் முடிவை எளிதாக எடுக்கவில்லை. அதற்கு முன், தங்களை ஆளாக்கிய இந்த கட்சியில் பயணிக்க, பல முயற்சிகளை எடுத்தனர். அதேபோல் இன்று அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன், சபாநாயகராக இருக்கும் பிரபாகர் உள்ளிட்ட பலர், கட்சியில் இணைந்து பயணிக்க, பல முறை முயற்சி எடுத்தும், நீங்கள் ஒரே ஒருவர் ஒப்புக்கொள்ளாமல், விடாப்பிடியாக இருந்ததால், த.வெ.க.,வுக்கு சென்றனர். இப்படி தங்களுக்கு அடையாளம் கொடுத்த கட்சியை விட்டுக் கொடுக்காமல் வந்தவர்களை, உதாசீனப்படுத்தி அனுப்பி வைத்தது தான், இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். பொதுச்செயலரிடம் எப்போதும் நான் கேட்பது ஒன்று தான். வேலுமணி உள்ளிட்ட இரண்டு கோடி தொண்டர்கள் என்ன சொல்ல வருகின்றனர் என்பதை, ஒரு முறை காது கொடுத்து கேளுங்கள். தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால், நாளை நமதே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

‘தி.மு.க.,வுடன் சேர்ந்து ஆட்சியமைக்க

முயற்சித்தவரின் முகத்திரை கிழிப்பு’அ.தி.மு.க.,வில் இருந்து த.வெ.க., சென்று, தற்போது தமிழக அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் நேற்று கோவையில் அளித்த பேட்டி:மன்னிக்கும் தன்மை இல்லாத தலைமை, நிலைத்து நின்றதாக வரலாறு இல்லை. அந்த வரலாறு பழனிசாமிக்கு ஏற்படும். பொள்ளாச்சியில் ஒரு திருமணத்துக்கு நான் சென்றபோது, வேலுமணியும் வந்தார்; வணக்கம் கூறிவிட்டு, பொதுவான கருத்துக்களை பேசினோம்; அரசியல் அல்ல.தி.மு.க.,வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க நினைத்ததே பழனிசாமி தான்.அவரது முகத்திரை கிழிக்கப்பட்டு இருக்கிறது; திரை விலகியிருக்கிறது. பழனிசாமியை பொறுத்தவரை, ஆட்சிக்கு வர துடிக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்த இயக்கம் எங்கே செல்கிறது என, மக்கள் கேட்கின்றனர். நுாற்றுக்கணக்கானோரை நீக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாக பழனிசாமி சொல்கிறார். ஆனால், அனைவராலும் உருவாக்கப்பட்டவர் என்பதை மறந்து பேசுகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வேறு; பழனிசாமி என்பவர் வேறு என்பதை, அவர் புரிந்து கொண்டால் சரி.அவரை, அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக்கவும், முதல்வராக்கவும் வேலுமணி உறுதுணையாக நின்றதை மறந்து பேசிக் கொண்டிருக்கிறார். காலம் அவருக்கு பதில் சொல்லும். எதிர்காலத்தில், பழனிசாமி எங்கே இருக்கிறார் என்பதை தேடித்தான் பார்க்க நேரிடும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை