கட்டட அனுமதி கோரும் விண்ணப்பங்கள் சரிபார்ப்பில் உள்ளாட்சிகள் கடும் தாமதம்
சென்னை:கட்டுமான திட்ட அனுமதிக்கு, 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பித்தால், அதில், பட்டா உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்வதில், உள் ளாட்சிகள் தாமதம் செய்வதாக புகார் கூறப்படுகிறது. தமிழகத்தில், 10,000 சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் ஒப்புதல் வழங்கலாம். இதில், விண்ணப்பங்கள் பரிசீலனை பணிகளை விரைவுபடுத்த, ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, வீடு கட்ட திட்டமிடும் பொதுமக்கள், உரிமம் பெற்ற பொறியாளர் வாயிலாக உரிய ஆவணங்களை, அதற்கான இணையதளத்தில் பதி வேற்றம் செய்ய வேண்டும். இதில், நிலத்தின் உரிமையை உறுதிப்படுத்தும் பட்டா, பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்வது கட்டாயம். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் ஆவணங்களை, ஆன்லைன் முறையிலேயே உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, பட்டா உள்ளிட்ட ஆவணங்களை, வருவாய் துறை இணையதளத்தில், 'தமிழ்நிலம்' தகவல் தொகுப்பில் ஒப்பிட்டு சரிபார்க்கலாம். பதிவுத்துறை இணையதளத்தில், பத்திரங்களை, வில்லங்க சான்று விபர தொகுப்பில் சரிபார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அதிகாரிகள், இந்த வசதியை முறையாக பயன்படுத்துவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, கட்டட அமைப்பியல் வல்லுனர் பி.பாலமுருகன் கூறியதாவது: ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தால், 30 நாட்களில் கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதில், நில உரிமை ஆவணங்களை ஒரு சில நாட்களில் ஆய்வு செய்து முடிக்க வேண்டும். ஆனால், மாநகராட்சி, நகராட்சிகளில் ஆன்லைன் விண்ணப்ப பரிசீலனையில், அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர். சென்னை, கோவை போன்ற நகரங்களில், தவறான ஆவணங்கள் அடிப்படையில் கூட கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்படுகிறது. அதே சமயம், சரியான ஆவணங்கள் மீது, அதிக அளவில் சந்தேகம் எழுப்புகின்றனர். சில இடங்களில் ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகளில், வெளியாட்களை அதிகாரிகள் ஈடுபடுத்துகின்றனர். இதனால், தகுதியான நபர்களுக்கு கட்டட அனுமதி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, உள்ளாட்சி அமைப்புகளில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.