உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்ற வழக்கு: பதில் கோரும் உயர்நீதிமன்றம்

 மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்ற வழக்கு: பதில் கோரும் உயர்நீதிமன்றம்

மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அறிக்கையை தமிழக அரசு மீண்டும் அனுப்பி, அதை மத்திய அரசு பரிசீலிக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை ஒத்தக்கடை கதிர் தாக்கல் செய்த பொதுநல மனு: மெட்ரோ ரயில் திட்டத்திற்கான கொள்கை 2017 ன் படி, 20 லட்சம் மற்றும் அதற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் அத்திட்டத்தை செயல்படுத்தலாம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மதுரையில் 15 லட்சம் பேர் உள்ளனர். மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு செலவு அதிகம். மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றது என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை நவ.,14 ல் உத்தரவிட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மதுரையின் மக்கள் தொகை 18 லட்சத்து 46 ஆயிரத்து 801. இது 14 ஆண்டுகளுக்கு முந்தையது. தற்போது மதுரை மாவட்டத்தில் 27 லட்சத்து 29 ஆயிரத்து 671 வாக்காளர்கள் உள்ளனர். மதுரையின் மக்கள் தொகை 20 லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளதில் சந்தேகம் இல்லை. மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அறிக்கையை திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்க தமிழக திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை புதிதாக மறு பரிசீலனை செய்ய மத்திய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார். நீதிபதிகள்: திட்டத்தை நிராகரிக்கவில்லை. விளக்கங்களுக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதில் இந்நீதிமன்றம் எத்தகைய நிவாரணத்தை வழங்குவது என கேள்வி எழுப்பினர். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலர், தமிழக திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலர், சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர், மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி டிச.,16 ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி