உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாம்பழம் கொள்முதல்; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

மாம்பழம் கொள்முதல்; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகளை பாதுகாக்கும் விதமாக, ஆந்திராவும், கர்நாடகாவும் நடவடிக்கை எடுத்த நிலையில், தமிழக அரசு பச்சைத் துரோகம் செய்துள்ளதாக பா.ம.க, செயல் தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். அவரது அறிக்கை; கர்நாடகத்தில் மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அவர்களிடமிருந்து 2.5 லட்சம் டன் மாம்பழங்களை கூட்டாக கொள்முதல் செய்யவும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4000 ஊக்கத் தொகை வழங்கவும் கர்நாடக அரசும், மத்திய அரசும் கூட்டாக முடிவு செய்திருக்கின்றன. கர்நாடக விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடிய இந்த ஏற்பாடு வரவேற்கத்தக்கதாகும்.கர்நாடக முதல்வர் சித்தராமய்யா மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கடிதம் எழுதியது உள்ளிட்ட பல வழிகளில் அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சரும், கர்நாடக வேளாண் துறை சாலுவராயசாமியும் நடத்தியப் பேச்சுகளில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கர்நாடக மாநில மாம்பழ வளர்ச்சி மற்றும் வாணிபக் கழகம் மூலம் மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான கர்நாடக உழவர்கள் பயனடைவார்கள்.கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள கர்நாடக விவசாயிகள் மாம்பழ விலை வீழ்ச்சியில் இருந்து ஒரளவு விடுபட்டு மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் மாம்பழ விவசாயிகள் கண்ணீர் கடலில் மிதக்கின்றனர். அவர்கள் விளைவித்த மாம்பழங்களை வாங்க ஆளில்லாததால் ஏரிகளில் மீன்களுக்கு உணவாகவும், சாலையோரங்களிலும் கொட்டப்படும் அவலம் தொடர்கிறது. இதை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.ஒரு மாநிலத்தின் உவிவசாயிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், உடுக்கை இழந்தவன் கை போல, அவர்களின் இடுக்கண் களைய வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும். இந்தக் கடமையை ஆந்திர அரசும், கர்நாடக அரசும் மிகச் சரியாக செய்திருக்கின்றன. ஆந்திராவில் ஒரு டன் மாம்பழம் ரூ.12 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்யப்பட வேண்டும். அதில் ரூ.8 ஆயிரத்தை மாம்பழக் கூழ் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில், மீதமுள்ள ரூ. 4 ஆயிரத்தை மாநில அரசே ஊக்கத்தொகையாக வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்திலும் மாம்பழத்திற்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுவதுடன் கொள்முதல் செய்யப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆனால், தமிழகத்தில் விவசாயிகளுக்கு துரோகம் மட்டுமே பரிசாகக் கிடைத்துள்ளது. மாம்பழங்கள் கட்டுபடியாகும் விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் மாம்பழக் கூழ் ஆலை அதிபர்களை அழைத்து முத்தரப்புப் பேச்சுகளை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று கடந்த 4ம் தேதியே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், விவசாயிகள் நலன் காக்க தமிழக அரசு எதுவும் செய்யவில்லை.விவசாயிகளை தவிர்த்து விட்டு மாம்பழக் கூழ் ஆலை அதிபர்களை மட்டும் அழைத்துப் பேசுவது போல நாடகமாடிய தமிழக அரசு, ஜூன் 20ம் தேதி முதல் மாம்பழக் கூழ் ஆலைகள் மாம்பழங்களை நல்ல விலைக்கு கொள்முதல் செய்யும் என்று அறிவித்ததுடன் ஒதுங்கி விட்டது. ஆனால், ஜூன் 20ம் தேதிக்கு பிறகு நான்கு நாள்களாகியும் எந்த ஆலையும் மாம்பழங்களை சொல்லிக்கொள்ளும் வகையில் கொள்முதல் செய்யவில்லை.தமிழகத்தில் இதுவரை 40% அளவுக்கு மட்டுமே மாம்பழங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள மாம்பழங்களும் அறுவடை செய்யப்பட்டால் நிலைமை மேலும் மோசமாகி விடும். எனது தமிழக அரசு இனியும் துரோகத்தைத் தொடராமல் அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்கள் மாம்பழக் கூழ் ஆலைகளால் கொள்முதல் செய்யப்படுவதையும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே அறுவடை செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தது ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இ.பி.எஸ்., கண்டனம்

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வழக்கம் போல இங்குள்ள ஸ்டாலின் மாடல் விடியா தி.மு.க., அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. வேளாண்துறை அமைச்சரோ, வெளிநாட்டு சுற்றுலாவில் பிஸியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மத்தியில் கூட்டணியாக 39 எம்.பி.,க்களை வைத்திருந்தும், மா விவசாயிகளுக்காக குரல் கொடுத்ததா தி.மு.க.,? இல்லை. விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட அரசு தானே இந்த அரசு? இவர்களிடம் விவசாயிகள் நலன் பற்றி எப்படி எதிர்பார்க்க முடியும்?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

suresh guptha
ஜூன் 23, 2025 15:52

ENJOY FOR THE VOTES U HAVE MADE,KARNATAKA EVENTHOUGH OPPOSION RULED STATE CENTRAL GOVERNMENT HELPED BECAUSE IT HAS REQUESTED,BUT WE , DON T HAVE TIME ,TIME IS SPEN ON MARAN BROTHERS FIGHT,ALLIANCE PARTY RETAINING,COLLECTION IN .............,IF FARMER FAILS,I CAN BUY THE LAND AT THROW AWAY PRICE AS WE DO IN CHENNAI


சமீபத்திய செய்தி