மாம்பழம் சின்னத்தை முடக்க தேர்தல் கமிஷனுக்கு ராமதாஸ் மனு
சென்னை: மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும்' என தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரிடம், பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.தேர்தல் கமிஷனரிடம் ராமதாஸ் அளித்த மனு:பாமகவின் தலைவராக தேர்வான அன்புமணியின் பதவிக் காலம் முடிந்து விட்டது. எனவே, கடந்த 2025ம் ஆண்டு டிசம்பரில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில், கட்சி தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, ஏற்கனவே தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ளோம். எனவே, வரும் தமிழக சட்டசபை தேர்தலில், பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்தை வழங்கும், 'ஏ' மற்றும் 'பி' படிவங்களில் கையெழுத்திடும் உரிமை, ராமதாசுக்கு மட்டும் தான் உள்ளது. ஒரு சின்னத்தை, இரு தரப்பினர் கேட்கும்போது, அதை முடக்கி, இரு தரப்புக்கும் புது சின்னங்களை கொடுக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது, ராமதாஸ் - அன்புமணி இடையே, சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் அளவுக்கு பிரச்னைகள் உள்ளன. எனவே, மாம்பழம் சின்னத்தை, உடனே முடக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.