உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையம் அமைக்க மாருதி நிறுவனம்- தமிழக அரசு ஒப்பந்தம்

தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையம் அமைக்க மாருதி நிறுவனம்- தமிழக அரசு ஒப்பந்தம்

சென்னை:தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட, 10 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையம் அமைக்க, மாருதி சுசுகி நிறுவனத்துடன், தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. நேற்று தலைமை செயலகத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்வில், உள்துறை செயலர் தீரஜ்குமார், போக்குவரத்து ஆணையர் கஜலட்சுமி, மாருதி சுசுகி நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் தருண் அகர்வால் உட்பட பலர் பங்கேற்றனர். ஒப்பந்தப்படி, முதல் கட்டமாக, நடப்பு நிதியாண்டில், 10 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதுகுறித்து, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: சாலை விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவு அல்லது போதிய பயிற்சி இல்லாததே முக்கிய காரணம். எனவே, ஓட்டுநர் உரிமத்தின் தரத்தை உயர்த்தும் வகையில், உரிய பயிற்சி பெற்று தகுதியுள்ளவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறும் வகையில், புதிய நடைமுறை அமலாக உள்ளது. இதற்காக, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையம் அமைக்க உள்ளோம். கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளங்கள் வாயிலாக, ஓட்டுநர் உரிம தேர்வு நடத்தும் போது, தேர்வு முடிவுகள் அனைத்தும், கணினி வாயிலாக துல்லியமாக பதிவு செய்யப்பட்டு, திறமை அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி