UPDATED : ஜூலை 22, 2025 06:09 AM | ADDED : ஜூலை 22, 2025 12:30 AM
தஞ்சாவூர்; தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லுாரி மாணவி அளித்த பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், மாணவர்கள், நேற்று போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லுாரியில், மருத்துவர் அல்லாத மருத்துவம் சார்ந்த பட்டய படிப்பில் பயிலும் மாணவி ஒருவருக்கு, அங்கு பயிலும் மாணவர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி, பெண்கள் மீதான பாலியல் பிரச்னைகளை விசாரிக்கும் விசாகா கமிட்டிக்கு புகார் மனு அனுப்பினார். நடவடிக்கை இல்லை. அதனால், நேற்று நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து, மருத்துவ கல்லுாரி வளாகத்தில் உள்ள முதல்வர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். மாணவிக்கு தொந்தரவு கொடுத்த மாணவரை, கல்லுாரியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். விசாகா கமிட்டி முறையாக செயல்பட வேண்டும் என, வலியுறுத்தி கோஷமிட்டனர். கல்லுாரி பொறுப்பு முதல்வர் பாலசுப்பிரமணியன், 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்ததால், மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர். கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ''மாணவிக்கு தொல்லை கொடுத்த மாணவர் ஒரு மாதம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். மேல் நடவடிக்கைக்காக, மருத்துவ கல்வி இயக்குநருக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.