உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் கலையம்சத்துடன் புனரமைப்பு: கோர்ட்டில் தகவல்

மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் கலையம்சத்துடன் புனரமைப்பு: கோர்ட்டில் தகவல்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீரவசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணி நிபுணர்களின் ஆலோசனைப்படி பழமை மாறாமல், கலையம்சத்துடன், முறையாக மேற்கொள்ளப்படுகிறது. தரத்தில் சமரசம் இல்லை என கோயில் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. சேலம் ராதா கிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உபகோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். புனரமைப்பு பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை, கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். அக்.,7 ல் விசாரணையின்போது கோயில் தரப்பு: மீனாட்சி அம்மன் மற்றும் அதன் உபகோயில்களுக்கு சொந்தமாக 12 மாவட்டங்களில் 1233.98 ஏக்கர் நிலம் உள்ளது. மதுரை செல்லுாரில் 8.37 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் உள்ளவர்கள் வாடகைதாரர்களாக தொடர சம்மதித்துள்ளனர். மற்றவர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக்கூறி ஆவணங்களை தாக்கல் செய்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆவணங்களை படித்து பார்த்து மனுதாரர் அக்.,23 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அக்.,10 ல் கோயிலுக்கு சென்று அங்குள்ள ஆவணங்களை படித்து பார்த்து விபரங்களை மனுதாரர் அறிந்து கொள்ளலாம் என்றனர். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர்: கோயிலில் ஒரு பகுதி ஆவணங்களை பார்வையிட்டேன். நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்புகள் உள்ளன. எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு விளக்கம் இல்லை. அதற்கு கோயில் நிர்வாகம் தரப்பு அவகாசம் கோரியது. ஆவணங்களை படிக்க அவகாசம் தேவை. தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணியை நுட்பமாக மேற்கொள்ள வேண்டும். கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி அவசரமாக பணி நடக்கிறது. கோயிலுக்கு உதவ நன்கொடையாளர்கள் உள்ளனர். அதை தவிர்த்து கோயில் திருப்பணிக்கு கோயில் டெபாசிட் தொகையை பயன்படுத்தக்கூடாது. பிரசாதம் தயாரிக்க கல் மண்டபம் அருகே பெரிய அடுப்பு பயன்படுத்தப்படுகிறது. இதனால் புகை வெளியாகிறது. அது சிற்பங்களில் படிய வாய்ப்புள்ளது. கோயில் தரப்பு வழக்கறிஞர் முரளி: திருப்பணிக்கு கோயில் நிதியை பயன்படுத்துவதில் தவறு இல்லை. வீரவசந்தராயர் மண்டப புனரமைப்பு பணி நிபுணர்களின் ஆலோசனைப்படி பழமை மாறாமல், கலையம்சத்துடன், முறையாக மேற்கொள்ளப்படுகிறது. தரத்தில் சமரசம் எதுவும் இல்லை. பிரசாதம் தயாரிக்க பெரிய அடுப்பு பயன்படுத்துவதாக மனுதாரர் கூறுகிறார். அதன் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்து தெரிவிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள் நவ.,17 க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !