உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணம், பரிசு கொடுத்து உறுப்பினர் சேர்ப்பு தமிழக இளைஞர் காங்., தேர்தல் கலாட்டா

பணம், பரிசு கொடுத்து உறுப்பினர் சேர்ப்பு தமிழக இளைஞர் காங்., தேர்தல் கலாட்டா

தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகம் கூண்டோடு கலைக்கப்பட்டு, மாநில தலைவர், துணைத் தலைவர், பொதுச்செயலர், மாவட்ட தலைவர்கள், சட்டசபை தொகுதி தலைவர், நகர, வட்டார தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக, 'ஐஒய்சி' எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.ஓட்டுப் போட ஒரு உறுப்பினர், 50 ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும். பணம் கட்டியவர்கள் தான் உறுப்பினராக முடியும். புகைப்படம், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்களை, ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.கிராமப்புற பகுதிகளில், 50 ரூபாய் கட்டணம் செலுத்தி, உறுப்பினராக சேர யாரும் விரும்பவில்லை. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடத்த முடியாமல், இளைஞர் காங்கிரசார் திணறுகின்றனர். அதனால், வரும் 28ம் தேதி வரை, உறுப்பினர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 2 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். மாநில தலைவர் பதவிக்கு, திணேஷ், அருண் பாஸ்கர், சூர்யபிரகாஷ் உட்பட, 14 பேரும், பொதுச்செயலர் பதவிக்கு, 59 பேரும் போட்டியிடுகின்றனர். இதில் அதிக உறுப்பினர்களை சேர்த்தவர்களுக்கு மட்டுமே, தேர்தலில் அதிக ஓட்டுக்கள் கிடைக்கும்; வெற்றி பெற முடியும்.அதனால், இப்பதவிக்கு போட்டியிடுவோர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு, அவர்களே பணத்தை கட்டி, உறுப்பினர்களாக சேர்த்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, காங்கிரசார் கூறியதாவது:கல்வித் தகுதி, திறமை, உழைப்பு என, அனைத்தும் இருந்தாலும், உறுப்பினர் கட்டணம் கட்டுவதற்கும், அவர்களுக்கு சன்மானமாக பொருளோ அல்லது பண உதவியோ செய்யும் வசதி இருந்தால் தான், தேர்தலில் போட்டியிடும் நிலை உள்ளது.பணம் படைத்தவர்கள் தான், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகத்தில் இடம்பெறும் வகையில், 'ஆன்லைன் தேர்தல் பார்முலா' உள்ளது. பணவசதி இல்லாத இளைஞர்கள் பதவியை கைப்பற்ற முடியாது என்பதால், அவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி உள்ளனர்.மாநில தலைவர் பதவிக்கு, செல்வப்பெருந்தகை, எம்.பி.,க்கள் மாணிக்தாகூர், கார்த்தி ஆகியோரின் ஆதரவாளர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவரின் வாரிசுக்கு பொதுச்செயலர் பதவி வாங்குவதற்காக, இளைஞர் காங்கிரசில் உறுப்பினராக சேருபவர்களுக்கு, வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.வட சென்னை மாவட்ட காங்கிரசில், பாத்திரங்கள், பணம் வழங்கப்படுகிறது. ஓட்டுக்கு 200 ரூபாய் வரை பணம் தரப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது கட்சியின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவாது. ஆன்லைன் தேர்தல் பார்முலாவில், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணம் கட்டி, போலி உறுப்பினர்களை சேர்த்து விடும் நிலை உள்ளது. எனவே, ஆன்லைன் தேர்தல் முறையை ரத்து செய்து, ஓட்டுச் சீட்டு வாயிலாக தேர்தல் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை