குறைந்தது 15 மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு நிர்ணயம்
சென்னை:'ஊரக பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், ஒரு வகுப்பிற்கு குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழக அரசு பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியாளர்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றனர். இம்மாதம் 1ம் தேதி நிலவரப்படி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயிக்க வேண்டும். தமிழ், ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு, வாரத்துக்கு குறைந்தபட்சம், 24 பாட வேளைகள், மற்ற ஆசிரியர்களுக்கு, வாரத்துக்கு 28 பாட வேளைகள் ஒதுக்க வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தை பின்பற்ற வேண்டும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில், குறைந்தபட்சம் 30 மாணவர்கள், ஊரகப் பகுதி பள்ளிகளில், 15 மாணவர்கள், ஒரு வகுப்பில் இருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும். அதற்குள் பணிநிரவலுக்கு விண்ணப்பித்தால், அவரை, தற்போதைய பணியாளர் நிர்ணயித்தலின்போது, உபரியாக காண்பிக்க வேண்டும். அதன்படி, முதுநிலை ஆசிரியர்களை பணி நியமணம் செய்து, விபரங்களை, இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.