தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்த கடல் வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டும் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல்
சென்னை:''தமிழகத்தின் பொருளா தாரத்தை உயர்த்த, கடல் வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டும்,'' என, பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். தமிழ்நாடு கடல்சார் வாரியம் சார்பில், 'நீலப் பொருளாதார மாநாடு - 2025' சென்னை தி.நகரில் நேற்று நடந்தது. இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக துணைத் தலைவர் தேவராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் வேலு பேசியதாவது: நீலப் பொருளாதார மாநாடு என்று கூறுவதை விட, நீலப் பொருளாதார கருத்தரங்கம் என்று கூறுவதே பொருத்தமானது. தமிழகத்தின் பொருளாதாரத்தை, ஒரு, 'டிரில்லியன் அமெரிக்க டாலர்' அளவிற்கு, அதாவது, 86 லட்சம் கோடி ரூபாய்க்கு உயர்த்த, நீலப் பொருளாதாரத்தின் பங்கை மேம்படுத்த, மாநாட்டில் பங்கேற்றிருக்கும் வல்லுநர்கள் அனுபவமிக்க கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீன்பிடி தொழில் தமிழகத்தின் கடற்கரைகள், பிற மாநிலங்களை போல அல்லாமல், வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளைக் கொண்ட ஒரு தீபகற்ப கடற்கரை பகுதி. பன்னாட்டுக் கப்பல்கள் செல்லும் வழித்தடத்திற்கு மிக அருகாமையில் கடற்கரையை கொண்டுள்ளது. மேலும், தெற்கே நெருங்கிய உறவு கொண்ட அண்டை நாடாக இலங்கை உள்ளது. 14 கடலோர மாவட்டங்கள் கொண்ட தமிழகத்தின் கடற்கரை பகுதிகளை, பல்வேறு தரப்பினர் பயன்படுத்துகின்றனர். வணிகத் துறைமுகங்கள், மீன்பிடித் துறைமுகங்கள், கடல்சார் சுற்றுலா மேம்பாடு, கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்த்தல் ஆகிய துறைகளில், நாம் மேலும் முன்னேற்றமடைய திட்டங்களை வகுக்க வேண்டும். கடந்த, 2024 - -25ம் ஆண்டுக்கான, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பி., ஆறிலிருந்து ஏழு சதவீதமாக இருக்கும் போது, தமிழகத்தின் ஜி.டி.பி., 11.2 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ரயில் இணைப்பு இதற்கான முக்கிய காரணம், தமிழகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடுகள், மனிதவள திறன் மேம்பாடு, அதிக வாகன உற்பத்தி நிறுவனங்கள், ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் போன்றவை தான். மேலும், எளிதில் தொழில் துவங்க உகந்த மாநிலமாகவும்தமிழகம் உள்ளது. சென்னை - கன்னியாகுமரி சாலையும், கிழக்கு கடற்கரை சாலையும், நம் கடலோர வணிக துறைமுகங்கள் மற்றும் மீன்பிடி துறைமுகங்களுக்கு எளிதான சாலை இணைப்பை வழங்குகின்றன. மேலும் தமிழகத்தில் கடற்கரை பகுதிகளுக்கு ரயில் இணைப்பு போதிய அளவில் உள்ளது. துறைமுக மேம்பாட்டாளர்கள், இவற்றை கருத்தில் கொண்டு துறைமுகங்களை அமைக்கவும், தொழில் துவங்கவும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சென்னை துறைமுக சபை தலைவர் சுனில் பாலிவால், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலர் செல்வராஜ், தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மைச் செயலர் வெங்கடேஷ் பங்கேற்றனர்.