மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக பெறுவது வைப்பு தொகை தான் அமைச்சர் முத்துசாமி விளக்கம்
ஈரோடு:''பாட்டிலுடன், 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது வைப்பு தொகையாக தான். பாட்டிலை திரும்ப வழங்கும் போது, 10 ரூபாயை மீண்டும் அவர்களிடமே வழங்கி விடுகிறோம்,'' என, மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கூறினார். அமைச்சர் முத்துசாமி ஈரோடில் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை கட்டாயமாக செயல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக துவங்கி சிறப்பாக நடந்து வருகிறது. பிற பகுதிகளில் விரிவாக்கம் செய்துள்ளோம். காலி பாட்டிலை சாலை, வயல்களில் போட்டு செல்கின்றனர். பாட்டிலுடன், 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது வைப்பு தொகையாக தான். பாட்டிலை திரும்ப வழங்கும் போது, 10 ரூபாயை மீண்டும் அவர்களிடமே வழங்கி விடுகிறோம்; இதை பலரும் தவறாக பேசுகின்றனர். பாட்டிலை திரும்ப தராதவர்களுக்கு, 10 ரூபாய் நஷ்டம். சேகரிக்கப்படும் பாட்டில், 50 காசு, ஒரு ரூபாய்க்கு கூட விற்காது. இதெல்லாம் உங்கள் காலில் குத்திவிடக்கூடாது என்பதற்காக தான். இதை தப்பு தப்பாக பேசுகிறீர்கள் . இவ்வாறு அவர் கூறினார். யாரிடம் புகார் செய்வது? டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் கூறியதாவது: குறிப்பிட்ட மது கடையில், மது பாட்டிலை வாங்கும்போது, எம்.ஆர்.பி., விலையை விட கூடுதலாக, 10 ரூபாய் பெறப்படும். வாங்குபவர், மதுவை குடித்துவிட்டு, அன்றோ அல்லது வேறு நாளிலோ, அதே கடையில் மட்டுமே, அந்த காலி பாட்டிலை வழங்கி, 10 ரூபாயை திரும்ப பெற முடியும். பாட்டில்களை ஸ்கேன் செய்து வழங்குவதால், அங்கு வாங்கிய பாட்டில்களை மட்டுமே திரும்ப பெற இயலும். காலி பாட்டிலை திரும்ப வழங்கும் போது, 10 ரூபாய் பணமாக பெறலாம். மது பாட்டிலை வாங்கவில்லை என்றால், புகார் செய்ய, அந்தந்த மாவட்ட மேலாளரின் எண், மாவட்ட மேலாளர் அலுவலக எண் ஆகியவை, ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் மது வாங்கும் கவுன்டரில் ஒட்டி வைக்கப்பட்டு உள்ளது. அந்த எண்ணுக்கு புகார் செய்யலாம். இவ்வாறு கூறினர்.