முந்திரி வாரியம் அமைப்பு அமைச்சர் பன்னீர் தகவல்
சென்னை:'தமிழகத்தில் முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களை பாதுகாத்திட, 'தமிழ்நாடு முந்திரி வாரியம்' எனும் தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது' என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: 'முந்திரி பரப்பை உயர்த்தி, உற்பத்தியை அதிகரிக்க, முந்திரிசார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க, முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க, 10 கோடி ரூபாயில் தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும்' என, நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதை செயல்படுத்த, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு முந்திரி வாரியம், கடலுாரை தலைமையிடமாக வைத்து செயல்படும். தலைவராக வேளாண் துறை அமைச்சர் இருப்பார். அரசால் நியமிக்கப்படும் பிரதிநிதி துணைத் தலைவராக செயல்படுவார். வேளாண் துறை செயலர், உறுப்பினர் செயலராக இருப்பார். தோட்டக்கலை இயக்குநர், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் தலைமை செயல் அதிகாரி, தமிழ்நாடு வேளாண் பல்கலை முதல்வர், முந்திரி பயிரிடும் மாவட்டங்களில் இருந்து, அரசால் நியமிக்கப்படும் இரண்டு விவசாயிகள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். மேலும், வேளாண் துறை செயலர் தலைமையில் நிர்வாகக்குழு அமைக்கப்படும். இக்குழு முந்திரி உற்பத்தி, பதப்படுத்துதல், முந்திரி தொழிலாளர்களின் நலன் காத்தல் குறித்து விவாதித்து முடிவெடுக்க, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது தேவைக்கேற்ப கூடும். முந்திரி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதை நோக்கமாக வைத்து, இவ்வாரியம் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.