உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய பேரிடர் நிதியிலிருந்து புயல் நிவாரணத்தை கொடுங்க அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

தேசிய பேரிடர் நிதியிலிருந்து புயல் நிவாரணத்தை கொடுங்க அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

காரியாபட்டி:''புயல் நிவாரணத்தை தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து விடுவிக்க வேண்டும்,'' என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் அவர் கூறியதாவது: மத்திய அரசு, மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக தன் பங்களிப்பாக, 944 கோடியை தமிழகத்திற்கு விடுவித்தது. அந்த நிதி குறித்து கூடுதல் விளக்கம் அளிக்க வேண்டியிருக்கிறது. 15வது நிதிக்குழு பரிந்துரையின்படி சட்டப்பூர்வமாக விடுவிக்கக் கூடிய நிதிதான் இது. கடந்த 2022 --- 23ம் ஆண்டில் பேரிடர் நிதியாக, 1,142 கோடி விடுவிக்கப்பட்டது. இதில், மத்திய அரசின் பங்கு, 856.5 கோடி. மாநில அரசின் பங்கு, 255.5 கோடி ரூபாய். அதேபோல, 2023 - -24ம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட 1,200 கோடியில், மத்திய அரசின் பங்கு, 900 கோடி. மாநில அரசின் பங்கு, 300 கோடி. 2024 -- 25ம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட 945 கோடியில், 315 கோடி ரூபாய் மாநில அரசின் பங்கு. இந்த தொகை ஜூன் மாதத்தில் விடுவிக்க வேண்டும். தற்போது தாமதமாக விடுவித்துள்ளனர்.'பெஞ்சல்' புயலுக்கு கூடுதல் நிவாரண நிதி கோரினோம். 'மிக்ஜாம்' புயல், தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் இரண்டு பேரிடர்கள் நிகழ்ந்தன. அப்போது, மத்திய அரசிடம் 37,906 கோடி கேட்கப்பட்ட நிலையில், வெறும், 276 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்டது.'பெஞ்சல்' புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். 6,675 கோடி ரூபாய் புயல் நிவாரணம் கேட்கப்பட்டுள்ளது. இதை தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து விடுவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை