உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேகத்தடைகளுக்கு வருகிறது தடை பாலங்களை பராமரிக்க தனி குழுமம் அமைச்சர் வேலு அறிவிப்பு

வேகத்தடைகளுக்கு வருகிறது தடை பாலங்களை பராமரிக்க தனி குழுமம் அமைச்சர் வேலு அறிவிப்பு

சென்னை:''சாலைகளில் தேவையில்லாத இடங்களில் வேகத்தடை அமைக்கக் கூடாது. இந்திய சாலை குழுமம் வழிகாட்டுதலின் படி, தேவையான இடங்களில் மட்டுமே வேகத்தடைகள் அமைக்க வேண்டும்,'' என, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் பராமரிப்பு குறித்த ஆலோசனை கூட்டம், துறை அமைச்சர் வேலு தலைமையில் சென்னை கிண்டியில் நேற்று நடந்தது.

தனியாக பதிவேடு

நெடுஞ்சாலைத் துறை செயலர் செல்வராஜ், திட்ட இயக்குனர் பாஸ்கரபாண்டியன், முதன்மை இயக்குனர் செல்வதுரை, தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், கோட்ட பொறியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் அமைச்சர் வேலு கூறியதாவது:நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில், பொறியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில் பெரும்பாலான சாலைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. மீதமுள்ள சாலைகளை, பள்ளமில்லாத சாலைகளாக பராமரிக்க வேண்டும். சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள முட்புதர்களை முழுமையாக அகற்ற வேண்டும். சாலையில் தேங்கும் மணலை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். சாலையின் கிலோ மீட்டரை குறிக்கும் எல்லை கற்களுக்கு உரிய வண்ணங்களை பூச வேண்டும். அறிவிப்பு பலகைகள், சாலை உபகரணங்கள், இரும்பு தடுப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும். அதற்கு தனியாக பதிவேடு வைத்திருக்க வேண்டும்.சாலைகளில் தேவையில்லாத இடங்களில், வேகத்தடைகள் அமைக்க கூடாது. விபத்துகளை குறைக்க இது உதவும். இந்திய சாலை குழுமம் வழிகாட்டுதலின் படி, தேவையான இடங்களில் மட்டுமே வேகத்தடைகள் அமைக்க வேண்டும். அத்தியாவசியமாக தேவைப்படும் பட்சத்தில், அதற்குரிய எச்சரிக்கை பலகைகள் வைத்து, அதன்பின் வேகத்தடைகள் அமைக்க வேண்டும். சாலைகளில் வெள்ளை கோடுகளை உரிய தரத்துடன் போட வேண்டும். நிலம் எடுப்பு பணிகளில், பொறியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். கண்காணிப்பு பொறியாளர்கள், கலெக்டர்களை தொடர்பு கொண்டு, நில எடுப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பாலங்கள் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்போது, ஆற்றின் அகலம், நீர் வெளியேற்றம், நீர்வரத்து, மழையின் அளவு, மண்ணின் தன்மை, பாலத்தின் நேர்ப்பாடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மார்ச் 31க்குள்

பாலங்கள் பராமரிப்பை கவனிக்க, 'பாலங்கள் கண்காணிப்பு குழுமம்' என்ற பிரிவு உருவாக்கப் பட உள்ளது. அதற்கு விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும். தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில், முடிக்கப்பட்ட பணிகளை தவிர, மற்ற அறிவிப்பு பணிகளை, மார்ச் 31க்குள் விரைந்து முடிக்க வேண்டும். நிலம் எடுப்பு, சாலை மேம்பாட்டு பணிகளில் மற்ற துறைகளால் காலதாமதம் ஏற்பட்டால், அதை உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு திட்ட அறிக்கை தயாரிக்கும்போது, அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி தொடர்பான கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ