உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1,000க்கும் மேற்பட்ட அரசு பஸ்களில் வைப்பர் வேலை செய்வதில்லை மழைக்காலத்தில் தவிக்கும் டிரைவர்கள்

1,000க்கும் மேற்பட்ட அரசு பஸ்களில் வைப்பர் வேலை செய்வதில்லை மழைக்காலத்தில் தவிக்கும் டிரைவர்கள்

சென்னை:தமிழகத்தில், 1,000க்கும் மேற்பட்ட அரசு பஸ்களில், 'வைப்பர்'சரியாக இயக்குவதில்லை. இதனால், மழைக் காலத்தில் பஸ்களை இயக்குவதில் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர்.பஸ்சின் முகப்பு கண்ணாடியில் விழும் மழைநீரை துடைப்பதே, 'வைப்பர்' கருவியின் வேலை. மழைநீரை நன்றாக துடைத்து, கண்ணாடி பளிச்சென்று தெரிந்தால் தான் டிரைவர் சாலையை சரியாக பார்த்து பஸ் ஓட்ட முடியும். அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும், 18,000 க்கும் மேற்பட்ட பஸ்களில், 1,000 பஸ்களில், 'வைப்பர்' சரியாக இயங்குவதில்லை என, டிரைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, டிரைவர்கள் சிலர் கூறுகையில், 'சில டவுன் பஸ்களில் வைப்பர் சரியாக இயங்குவதில்லை. கனமழை பெய்தால், பஸ்சை ஓட்டுவதற்கு சிரமமாக இருக்கிறது. வேகத்தை குறைத்து கண்ணாடிகளை துடைத்து விட்டுத்தான் ஓட்டுகிறோம்.'மாநகர பஸ்களுக்கு அடிக்கடி நிறுத்தம் வரும். அப்போதெல்லாம் துடைத்து விடுவோம். நீண்ட துாரம் செல்லும் விரைவு பஸ்களில் கொஞ்சம் கவனம் சிதறினாலும், பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது' என்றனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் பொதுச்செயலர் ஆறுமுகநயினார் கூறியதாவது: தமிழகம் முழுதும் அரசு பஸ்களில், 'வைப்பர்' பிரச்னை இருக்கிறது. அதற்கு தேவையான உதிரிபாகங்களை வாங்குவதில்லை. பணிமனை தொழில்நுட்ப பிரிவில், 2,000 பேர் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால், வைபரை சரிசெய்யவும் ஆட்கள் இல்லை.பத்தாண்டுகளை கடந்து ஓடும் பஸ்களில், வைப்பர் பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. மழைக்காலத்தில் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, நிர்வாகம் போதிய நிதியை ஒதுக்கீடு செய்து, அந்த கருவிகளை வாங்க வேண்டும். தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் போது, ஒவ்வொரு கி.மீ., 20 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இதை தமிழக அரசு, அவர்களுக்கு வழங்குகிறது. அதேபோல, அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் சராசரியாக, 16 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அதை வழங்க அரசு முன்வராதது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ