உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மலேஷியாவுக்கு சர்க்கரை ஏற்றுமதி மோசடி செய்த தாய், மகள் கைது

மலேஷியாவுக்கு சர்க்கரை ஏற்றுமதி மோசடி செய்த தாய், மகள் கைது

சென்னை: மலேஷிய நிறுவனங்களுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக, 10.61 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்த தாய், மகள் கைது செய்யப்பட்டனர்.சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் தமிழரசி, 42. இவரது தாய் கோவிந்தம்மாள், 62. இவர்கள் வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிறுவனம் வாயிலாக, மலேஷியாவில் உள்ள, 'அலைடு குரூப்' என்ற தனியார் நிறுவனத்திற்கு, சென்னையில் இருந்து, 12,000 மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக ஒப்பந்தம் செய்து, 10.61 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து மலேஷிய நிறுவனம் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து, தமிழரசி மற்றும் கோவிந்தம்மாளை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், மலேஷியா நாட்டு நிறுவனங்களுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்துவிட்டது போல போலி ஆவணங்கள் தயாரித்து, பண மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். இதேபோல, மும்பையை சேர்ந்த தொழில் அதிபருக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக, 75 லட்சம் ரூபாய் பெற்று, மோசடி செய்து தலைமறைவாக இருந்ததும் தெரியவந்து உள்ளது. சென்னை வளசரவாக்கம், பிரகாசம் சாலை, ராமகிருஷ்ணா தெருவில் உள்ள, தமிழரசி வீடு மற்றும் மதுரவாயல், கடம்பாடியம்மன் கோவில் தெருவில் உள்ள கோவிந்தம்மாள் வீட்டில் சோதனை நடத்தி, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அசையாச் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ