தே.மு.தி.க.,வுக்கு எம்.பி., சீட் அ.தி.மு.க.,வில் கொந்தளிப்பு
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் குருபூஜையில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்துள்ள நிலையில், தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுக்க, அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு கிளப்பி உள்ளது.சமீபத்தில், சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்த, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், தே.மு.தி.க., துணை செயலர் சுதீஷ், 28ல் நடக்கும் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். அதை ஏற்று, அந்நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில், தே.மு.தி.க.,வின் இம்முடிவுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை எப்படி அழைக்கலாம் என, அக்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், லோக்சபா தேர்தலின்போது பேசப்பட்டபடி, தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கக்கூடாது என்றும், அ.தி.மு.க., நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ம.க., - த.மா.கா., ஆகிய இரு கட்சிகளுக்கும் ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்பட்டது. ஆனால், லோக்சபா தேர்தலில், அந்த இரு கட்சிகளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் சேர்ந்ததே தவிர, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பழனிசாமிக்கு முழுமையான எதிர்ப்பில் செயல்படும் அண்ணாமலை பேச்சைக் கேட்டு, பா.ம.க.,வும் த.மா.க.,வும் தே.ஜ., கூட்டணியில் இணைந்தது போல, தே.மு.தி.க.,வும் நாளைக்கே, அந்தப் பக்கம் போகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதற்கேற்ப, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவும், விஜயகாந்த் நினைவு நாள் குருபூஜைக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். நாளையே, அவரும் அந்தப் பக்கம் போய்விடமாட்டார் என்று உறுதியாக சொல்ல முடியாது. அதனால், தே.மு.தி.க., விஷயத்தில் அ.தி.மு.க., கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே, த.மா.கா., - பா.ம.க.,வுக்கு என இரு எம்.பி., பதவிகளை விட்டுக் கொடுத்ததில், அ.தி.மு.க.,வுக்கு எந்த லாபமும் இல்லை. அதனால், இம்முறை தே.மு.தி.க.,வுக்கு தர கட்சியினர் விரும்பவில்லை. கூடவே, சட்டசபை தேர்தலுக்கு முன், தே.மு.தி.க., - தி.மு.க., கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.இது தவிர, அ.தி.மு.க., ஆதரவில் விஜய பிரபாகரன் ராஜ்யசபா எம்.பி.,யாக்கப்பட்டால், அதை வைத்து, பா.ஜ.,விடம் சென்று, மத்தியில் அமைச்சர் பதவி கேட்கவும் வாய்ப்புள்ளது. அதோடு, கட்சி இப்போதைக்கு இருக்கும் நிலையில், தே.மு.தி.க.,வை பா.ஜ.,வோடு இணைக்கவும் வாய்ப்புள்ளது.இப்படி எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும், தே.மு.தி.க.,வால் அ.தி.மு.க.,வுக்கு எவ்விதத்திலும் நன்மை ஏற்படப் போவதில்லை. அதனால் தான், அக்கட்சி விஷயத்தில் கவனமாக செயல்பட அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -