உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருக பக்தர்கள் மாநாடு: வாகன பாஸ் நிபந்தனை ரத்து

முருக பக்தர்கள் மாநாடு: வாகன பாஸ் நிபந்தனை ரத்து

மதுரை:மதுரையில் நாளை நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள், அந்தந்த பகுதி டி.எஸ்.பி.,களிடம் அனுமதி பாஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனையை, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு ரத்து செய்தது.ஹிந்து முன்னணி மாநில செயலர் முத்துகுமார் தாக்கல் செய்த மனு மீது, நீதிபதி பி.புகழேந்தி ஜூன் 13ல் விசாரித்தார்.அரசு தரப்பு, 'மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் அந்தந்த டி.எஸ்.பி., அலுவலகத்தில் விண்ணப்பித்து அனுமதி அட்டை பெற வேண்டும். ஒவ்வொரு மண்டலத்திற்கும் வெவ்வேறு வண்ண பாஸ்கள் வழங்கப்படும்.

சாத்தியமற்றது

'பாஸ் பெறாமல் வரும் வாகனங்கள் மதுரைக்குள் அனுமதிக்கப்படாது என்பன உள்ளிட்ட 52 நிபந்தனைகளுடன், ஜூன் 22ல் மாநாடு நடத்த அனுமதித்து அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்' என, தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதி, 'மாநாட்டில் பங்கேற்க வாகன அனுமதி கோரிய 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும். நிராகரித்தால் அதற்குரிய காரணங்களை தெளிவுப்படுத்த வேண்டும். அறுபடை வீடு மாதிரி வடிவ கண்காட்சி, மாநாடு நடத்தலாம்' என, உத்தரவிட்டார்.போலீஸ் விதித்த நிபந்தனையை தனி நீதிபதி ரத்து செய்யாததை எதிர்த்து, ஹிந்து முன்னணி மண்டல செயலர் அரசு பாண்டி மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள், 'இதற்கு முன் நடந்த அரசியல் கட்சிகள் மாநாட்டிற்கு வாகன பாஸ் வழங்கப்பட்டதா?' என, கேள்வி எழுப்பினர். இதற்கு அரசு தரப்பு, 'பா.ம.க., மாநாடு, தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜையின் போது வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. 'அதுபோல் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்களை முறைப்படுத்த பாஸ் வழங்கப்படுகிறது. ஒரே இடத்தில் பாஸ் வழங்கினால் தாமதம் ஏற்படும். இதை தவிர்க்க பல்வேறு இடங்களில் பாஸ் வழங்கப்படுகிறது' என, வாதிட்டனர்.மனுதாரர் தரப்பு, 'பாஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனை உள்நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது நடைமுறை சாத்தியமற்றது.

அதிகாரம் இல்லை

'நிபந்தனையானது மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக சென்று வருவதை தடுக்கிறது. இது அரசியல் மாநாடல்ல. மதம் சம்பந்தப்பட்டது. ஒரு லட்சம் பேர் கந்தசஷ்டி பாடுவர்' என, விவாதம் நடந்தது.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கொடைக்கானல், ஊட்டியில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் அங்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இ - பாஸ் வழங்கும் நடைமுறையை கலெக்டர்கள் பின்பற்றுகின்றனர். முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வெளிமாவட்டம், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வாகனங்களில் வருவர். இதற்கு பாஸ் வழங்கும் நிபந்தனை விதிக்க, மோட்டார் வாகன சட்டப்படி போலீசாருக்கு அதிகாரம் இல்லை.மாநாடு நடக்கும் பகுதி நுழைவாயில் மற்றும் வாகன நிறுத்தம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் பூத்கள் அமைக்க வேண்டும். மாநாட்டிற்கு வரும் வாகனங்களின் டிரைவர்கள் ஓட்டுநர் உரிமம், ஆதார், வாகன பதிவு ஆவணத்தை பூத்களில் உள்ள போலீசாரிடம் சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். பாஸ் நிபந்தனை ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை