வேலூர் : விரைவில் தூக்குக் கயிற்றை சந்திக்க உள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினி, மகள் ஹரித்திரா ஆகியோர், இன்று வேலூர் வருகின்றனர். ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் செப்டம்பர் 9ம் தேதி, வேலூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, மூவரின் குடும்பத்தினருக்கும், சிறைத்துறையினர் முறைப்படி தகவல் கொடுத்துள்ளனர்.
மூன்று பேரையும் தூக்கில் போட்ட பிறகு, அவர்கள் உடலை பெற்றுச் செல்லும்படி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து, முருகன் மனைவி நளினி, மகள் ஹரித்திரா ஆகியோர் முருகனை சந்திக்க, இன்று வேலூர் வருகின்றனர்.தற்போது, நளினி சென்னை புழல் சிறையில் உள்ளார். முருகனை சந்திப்பது தொடர்பான மனுவை, புழல் சிறை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். கனடாவில் இருக்கும் ஹரித்திராவையும், வேலூர் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பேரறிவாளன் தாய் அற்புதம்மாள், தந்தை குயில் தாசன் ஆகியோரும் இன்று வேலூர் சிறைக்கு வந்து பேரறிவாளனை சந்திக்கின்றனர்.
கருணை மனு முடிவு தாமதம்: மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் திலீபன், வேலூர் சிறைக்கு வந்து முருகனை பார்க்க அனுமதி கேட்டபோது, சிறைத்துறையினர் மறுத்து விட்டனர்.
பின், திலீபன் கூறியது: முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், ஜனாதிபதிக்கு, 11 ஆண்டுக்கு முன் கருணை மனுஅனுப்பினர். அந்த மனுவின் மீது மத்திய உள்துறை அமைச்சகம் இதுவரை எத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது. ஏன் காலதாமதமாக கருணை மனு நிராகரிக்கப்பட்டது? நிராகரிப்பின் போது சொல்லப்பட்ட காரணங்கள் குறித்தும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாதாரணமாக இதற்கு, 30 நாட்கள் தேவை. ஆனால், தகவல் அறியும் உரிமை சட்டம் 7 (1)ன் படி அவசர மனு தாக்கல் செய்தால், ஐந்து நாளில் பதில் வந்து விடும். இதற்கான முயற்சியில், 15 வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள், டில்லியில் முகாமிட்டுள்ளனர். இவ்வாறு திலீபன் கூறினார். இதே போல, மும்பை முன்னாள் நீதிபதி சுரேஷ் என்பவரும், மூன்று பேரையும் பார்க்க மனு கொடுத்த போதும், சிறை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்து விட்டனர்.