தமிழக காவல்துறை கவனக்குறைவே காரணம் நாகேந்திரன் குற்றச்சாட்டு; பா.ஜ., வெளிநடப்பு
சென்னை:'கரூர் துயர சம்பவத்திற்கு காவல் துறையின் கவனக்குறைவே காரணம்' எனக் கூறி, சட்டசபையில் இருந்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் நடந்த விவாதம்: பா.ஜ., - நயினார் நாகேந்திரன்: கடந்த நான்கரை ஆண்டுகளாக பொதுக்கூட்டங்கள் நடத்த, எதிர்க்கட்சிகள் கேட்கும் இடங்களில் காவல் துறை அனுமதி கொடுப்பதில்லை. நீதிமன்றத்திற்கு சென்றுதான் அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால், ஆளும் கட்சிக்கு அந்த நிலைமை இல்லை. முதல்வர் ஸ்டாலின்: அனுமதிக்கப்பட்ட இடங்களில் கூட்டம் நடத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அனுமதி இல்லாத இடங்களில் அனுமதி கேட்கும்போது பிரச்னை வருகிறது. அதனால்தான் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை வருகிறது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தால், அதை ஆதாரத்தோடு கூறினால், நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது. நயினார் நாகேந்திரன்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசிய கரூர் ரவுண்டானா பகுதியில் அனுமதி கொடுத்திருந்தால் நெருக்கடி ஏற்பட்டிருக்காது. த.வெ.க., தலைவர் தாமதமாக வந்ததுதான் நெரிசலுக்கு காரணம் என, முதல்வர் ஸ்டாலின் சொன்னதில் உண்மை இருக்கிறது. பாட்டிலுக்கு, 10 ரூபாய் என விஜய் பாட ஆரம்பித்த பின், மின்சாரம் நிறுத்தப்படுகிறது; செருப்பு வீசப்படுகிறது. தடியடி நடத்தப்பட்டதாகவும் சொல்கின்றனர். முதல்வர் ஸ்டாலின்: தடியடி எதுவும் நடத்தப்படவில்லை. நயினார் நாகேந்திரன்: செருப்பு வீசியது யார்? 50, 60 ரவுடிகள் புகுந்ததாக சொல்கின்றனர். முதல்வர் ஸ்டாலின்: திட்டமிட்டு யாரும் செருப்பு வீசவில்லை. தண்ணீர் வேண்டும் என்பதற்காக, கவனத்தை திசை திருப்பவே செருப்பு வீசியதாக கருதுகிறேன். சி.பி.ஐ., விசாரணையில் உண்மை வெளிவரும். இப்போது அதைப் பற்றி திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம். நயினார் நாகேந்திரன்: திசை திருப்ப சொல்லவில்லை. எனக்கு தெரிந்த தகவல்களை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். காவல் துறை கொடுக்கும் தகவல்களைத்தான் முதல்வர் வாசிக்க முடியும். எதிர்க்கட்சி நடத்தும் கூட்டங்களுக்கு, அதிகமான காவலர்கள் வருவதில்லை. 5 லட்சம் பேர் பங்கேற்ற மதுரை ஹிந்து முன்னணி மாநாட்டிற்கு, ஒரு காவலர் கூட வரவில்லை. அமைச்சர் சிவசங்கர்: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அபாண்டமான தகவல்களை பொதுவெளியில் பேசினார். அவருக்கும், இவருக்கும் நடக்கும் போட்டியில், அண்ணன் இப்படி பேசுகிறாரோ என்று சந்தேகமாக உள்ளது. நயினார் நாகேந்திரன்: நான் யாரையும் போட்டியாக கருதுவதில்லை. கரூர் சம்பவத்திற்கு காவல் துறையின் கவனக்குறைவே காரணம். அதற்கு வருத்தம் தெரிவித்து, நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது. அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு கரூர் சம்பவம் தொடர்பான விவாதத்தில், பா.ம.க., சார்பில் ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ., ஜி.கே.மணி பேசினார். அதன்பின், அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மூவரின் சார்பில், வெங்கடேஸ்வரன் பேச அனுமதி கோரினார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். அப்போது குறுக்கிட்ட சபை முன்னவர் துரைமுருகன், ''சட்டப்படி பா.ம.க., ஒன்றுதான்,'' என்றார். அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.