தேர்தல் பணிகளில் வேகம் போதாது பா.ஜ.,வினருக்கு நாகேந்திரன் எச்சரிக்கை
மதுரை: தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பா.ஜ., சார்பில் பொறுப்பாளர், அமைப்பாளர், இணை அமைப்பாளர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினருடன், 'வீடியோ கான்பரன்ஸ்சிங்' வாயிலாக, மாநில நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் பேசுகையில், “சட்டசபை தேர்தலில், யாருக்கு வேண்டுமானாலும் 'சீட்' கிடைக்கலாம். ஆனால், தகுந்த வேகத்தில் பா.ஜ.,வினர் பணியாற்றாதது வேதனையாக இருக்கிறது. ''தேர்தல் பணியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் பணிகள் தொய்வாக இருப்பதாகவும், நிர்வாகிகளின் வேகம் பத்தாது எனவும் தேசிய அமைப்பாளர் சந்தோஷ் வருத்தப்பட்டார்,” என்றார். முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில், ''வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில், முதல்வர் ஸ்டாலின் தொகுதியிலேயே 19,௦௦௦ போலி வாக்காளர்கள் உள்ளதாக மத்திய அமைச்சரே தெரிவித்துள்ளார். ''இதேபோல, எல்லா தொகுதிகளிலும் தி.மு.க.,வினர் சேர்த்த போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்க வேண்டும். பா.ஜ.,வின் ஓட்டுச்சாவடி ஏஜென்ட்களில் சிலர் கூலி வேலைக்கு செல்வோராக இருந்தால், அவர்களுக்கு அந்தந்த தொகுதி குழுவினர் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும்,'' என்றார்.