நல்லக்கண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு,101. உடல் நலம் பாதிக்கப்பட்டதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக நல்லக்கண்ணு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்ததில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. சென்னை நந்தனத்தில் உள்ள, வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, சுவாச பிரச்னைக்காக, 'டிரக்கியாஸ்டமி' கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, வீடு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. எனவே, நேற்று சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.