ஐ.ஐ.டி., மாணவிக்கு பாலியல் தொல்லை தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
சென்னை:சென்னை ஐ.ஐ.டி., மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தை, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில், அங்கு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த 26ம் தேதி இரவு தனியாக நடந்து சென்றுஉள்ளார். அப்போது, கையில் கட்டையுடன் வந்த மர்ம நபர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பியுள்ளார். இதுகுறித்த புகார் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள, 'மும்பை சாட்' என்ற உணவகத்தில், வேலை பார்த்து வந்த ரோஷன் குமார் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், இச்சம்பவம் குறித்து, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிப்பதாக அறிவித்துள்ளது. மேலும், தமிழக டி.ஜி.பி.,க்கு, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹாட்கர் எழுதியுள்ள கடிதத்தில், 'சென்னை ஐ.ஐ.டி., மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில், உரிய சட்டப்பிரிவுகளின்படி, நியாயமான விசாரணையை விரைந்து முடித்து, தண்டனை வழங்க வேண்டும். 'பாதிக்கப்பட்ட மாணவிக்கு, உடனடியாக மருத்துவ உதவி, மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துஉள்ளார்.