UPDATED : செப் 05, 2023 10:32 AM | ADDED : செப் 05, 2023 10:31 AM
சென்னை: ஆசிரியர் தினமான இன்று(செப்.,05), நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: நமது எதிர்காலத்தை உருவாக்குவதிலும், கனவுகளை ஊக்குவிப்பதிலும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆசிரியர்கள் தினத்ததில் அவர்களின் அர்ப்பணிப்பிற்காக வாழ்த்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள். மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள்.கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும் அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கை: ஆசிரியர்தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இளம் மனங்களின் திறனையும் குணநலன்களையும் வடிவமைத்து வலிமை மற்றும் திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மரியாதை
சிறந்த ஆசிரியர், தத்துவஞானி, மாபெரும் தலைவர் மற்றும் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது படத்திற்கு கவர்னர். ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.