உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 23ல் உருவாகுது புதிய காற்றழுத்தம் அரசுக்கு வானிலை மையம் கடிதம்

23ல் உருவாகுது புதிய காற்றழுத்தம் அரசுக்கு வானிலை மையம் கடிதம்

சென்னை:தென்கிழக்கு வங்கக் கடலில், வரும், 23ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது, படிப்படியாக வலுவடைய வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விடும்படி, தமிழக அரசுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கடிதம் அனுப்பி உள்ளது. அதன் அறிக்கை: தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கோடியக்கரையில், 9; நாகப்பட்டினம் வேளாங்கண்ணியில், 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தென்மாவட்டங்களை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், நாளை வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், 23ம் தேதி, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கு அடுத்த இரண்டு நாட்களில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். வரும், 24ம் தேதி வரை இந்த நிலை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும், அதிகாலை நேரங்களில் பனி மூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு கடிதம் புதிதாக உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து, தமிழக அரசுக்கு வானிலை ஆய்வு மையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து, வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ். பாலச்சந்திரன் கூறியதாவது: வங்கக்கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, எந்தப் பகுதி நோக்கி நகரும் என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசின் தலைமை செயலர், வருவாய் துறை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர், தமிழக பேரிடர் மேலாண்மை ஆணைய இயக்குனர், ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

வட மாவட்டங்களை நெருங்கும்!

காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து, தன்னார்வ வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறியதாவது: தெற்கு வங்கக்கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது, 26ம் தேதி புயல் சின்னமாக வலுவடைய வாய்ப்புள்ளது. இந்த புயல் சின்னம், வடகடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களை நோக்கி நகர வாய்ப்புள்ளது. அதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி