சொத்து விற்பனையில் ரூ.20,000க்கு மேல் காசோலை பதிவுத்துறை புதிய உத்தரவு
சென்னை, நவ. 8- சொத்து பரிவர்த்தனையில், 20,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகை, காசோலையாக தான் கொடுக்கப்படுகிறது என்பதை, சார் - பதிவாளர்கள் உறுதி செய்ய, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ள உத்தரவு: சொத்து பரிமாற்றத்தில் ரொக்கமாக பணம் கைமாறுவதை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 20,000 ரூபாய்க்கு மேல் ரொக்க பரிமாற்றத்துக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனவே, 20,000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்த வேண்டிய இடங்களில், காசோலை மற்றும் வங்கி வரைவோலையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறி ரொக்க பரிமாற்றம் செய்வோர் குறித்த விபரங்களை, வருமான வரித் துறை திரட்டி வருகிறது. இந்நிலையில், சொத்து விற்பனை பத்திரங்களில், விற்பவர், விலையாக பேசப்பட்ட தொகை என்ன; அதை எந்த வடிவில் பெற்றேன் என்பதை குறிப்பிட வேண்டும். இதில், வருமான வரிச் சட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவின் படி, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்க பரிமாற்றம் இருக்கக் கூடாது. ஆனால், அதே சட்டத்தில் இன்னொரு பிரிவில், கடன், வைப்புத்தொகை, சொத்துக்கான முன்பணம், சொத்து பரிமாற்றத்துக்கான தொகை ஆகியவற்றில், 20,000 ரூபாய்க்கு மேல் ரொக்கம் கையாளக் கூடாது. இந்த விதியின் அடிப்படையில், 20,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக பெற்றதாக, பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறதா என்பதை சார் - பதிவாளர்கள் கவனிக்க வேண்டும். அவ்வாறு ரொக்க பரிமாற்றம் நடந்திருப்பது தெரிந்தால், அது குறித்து சார் - பதிவாளர்கள் வருமான வரித் துறைக்கு தெரிவிக்க வேண்டும். இதை, டி.ஐ.ஜி.,க்கள் முறையாக கண்காணித்து, உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.